ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியை தொழிலுக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பேர் கைது
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியொருவரை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை - சூச்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த யுவதிக்கும் அவரது மூத்த சகோதரிக்கும் டுபாயில் தாதியர் சேவையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை ஒமானில் வீட்டு வேலைக்கு அனுப்புவதற்கு சந்தேக நபர்கள் செயற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விஸாவில் வெளிநாடு சென்றமையினால் தொழிலின்றி ஒமானின் பல்வேறு இடங்களிலும் குறித்த யுவதிகள் இருவரும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமது தங்கை கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்ததாக மூத்த சகோதரி தனது தாய்க்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த யுவதியையும் அவரது மூத்த சகோதரியையும் ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிய அம்பாந்தோட்டை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.
சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.