வடக்கில் பல பண்ணைகள் படையினரின் ஆக்கிரமிப்பில், "கிளீன் சிறிலங்கா திட்டம்" அகற்றுமா --ந.லோகதயாளன் --

2 months ago



இலங்கையில் "கிளீன் சிறிலங்கா திட்டம்" பேச்சளவில் தற்போது பேச்சளவில் இருந்தாலும் செயலளவில் செய்ய வேண்டிய கிளீன் பல விடயங்கள் உள்ளது.

குறிப்பாக பொருளாதார மேம்பாடு கருதி மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாய இடங்களில் இருந்து படையினரை அகற்றல் ஜனாதிபதி கிளீன் செய்வாரா என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.

வடக்கில் பல பண்ணைகள் இன்றுவரை படையினரின் ஆக்கிரமிப்பிலேயே உள்ளன.

அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் 394 ஏக்கர் நிலப்பரப்பு, ஜெயபுரத்தில் 120 ஏக்கர் பண்ணை, மலையாள புரத்தில் 798 ஏக்கர் பொதுப் பண்ணை, சாந்தபுரத்தில் 680 ஏக்கர் பண்ணை, முழங்காவில் 1,800 ஏக்கர் மர முந்திரிகை தோட்டத்தின் பெரும்பகுதி என்பனவற்றுடன் முக்கொம்பன் பகுதியில் உள்ள 100 ஏக்கர் தென்னம் தோட்டம் என்பனவற்றை இன்றும் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை, முத்தையன்கட்டு பகுதியில் பல நூறு ஏக்கர் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இராணுவ பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையோடு துணுக்காய் தேறாங்கண்டல் பண்ணை, கொக்குத்தொடுவாயில் முந்திரிகை செய்கைக்கு என தலா 25 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

மன்னார் மாவட்டத்திலே வெள்ளாங்குளத்தின் 500 ஏக்கர் விவசாய பண்ணை ஆக்கிமிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் தனியார் நிலத்தில் இராணுவத்தின் பெரும் பண்ணை உள்ளது.

வவுனியா தமிழர் நிலம் பகுதியிலும் 25 ஏக்கர் பரப்பளவில் இராணுவப் பண்ணை இருக்கின்றது

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மேற்குறித்த விவசாய பண்ணைகள் ஊடாக மட்டும் ஆண்டு தோறும் 15 மில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்.

அதே போன்று கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலி.வடக்கில் படையினர் வசம் உள்ள 3,112 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பில் நூற்றிற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் தோட்டம் செய்து வருமானம் ஈட்டுகின்றது.

இது போதாதென்று பாதுகாப்பு சார் காரணங்களை நுண்ணிய வடிவில் வன்னியின் வாழ்வாதாரப் பிரச்சினைகளோடு பிணைத்து விட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பொருளாதாரம் சார்ந்து மாற்றுத் தெரிவில்லாமல், இராணுவத்தின் பண்ணைகளில் கூலி வேலை செய்தால்தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்த இராணுவ பண்ணைகளை மூடி, விவசாய அமைப்புக்களிடம் அவற்றை வழங்கி அபிவிருத்தி செய்தால் வன்னி மட்டுமின்றி வடக்கு மாகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிப்புச் செய்ய முடியும்.

இவை இராணுவ நீக்கப் பிரச்சினை என்பதால் ஆட்சியாளர்கள் செய்ய மறுக்கின்றார்கள்.

இவை படையினர் மேற்கொள்ளும் விவசாய நிலங்கள். இவை தவிர்ந்த படை நிலைகளும் உண்டு.

இதில் முல்லைத்தீவு வட்டுவாகலில் 680 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாமும், கேப்பாபுலவில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை முகாமும், கரிப்பட்டமுறிப்பில் 6,200 ஏக்கர் முகாமும் இருக்கின்றன்.

மன்னார் சன்னர் பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இராணுவ முகாம் இருக்கும் அதே நேரம் முள்ளிக்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வவுனியா புளியங்குளம் பகுதியில் தனியார் காணிகளை அபகரித்து சிறப்பு அதிரடிப் படை முகாம் உள்ளது.

வவுனியா, மருதோடை சந்தியில் பல ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் பகுதியில் 15 ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் நிறுவப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சந்தியில் 50 ஏக்கர் (சுடலை உட்பட) அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2019 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3,178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் இருந்தன.

ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது.

திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் ஏ9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1,702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது.

இந்த இராணுவ முகாம் பகுதிக்குள் மழை காலத் தில் நீர் போக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள குளத்தின் வான்கட்டு முழுமையாக உடைத்து விடப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் பொருளாதாரம் முடங்கி கிடக்கின்றது.

வடக்கு மாகாண பொருளாதார குறித்தும் அபிவிருத்தி குறித்தும் பேசும் எவரும் இந்த விடயங்களைப் பேசுவதில்லை.

எனவே அநுர அரசு பொருளாதார நிலைகளில் இருந்து படையினரை அகற்றிக் "கிளீன செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நெருக்கடி இது எனில் மறுபக்கம் இப்பகுதிகளில் படையினர் மேற்கொள்ளாத தொழிலே இல்லை என்று கூறலாம்.

விடுதிகள், உணவகங்கள், சிற்றூண்டிச் சாலைகள் மட்டுமன்றி முடிவெட்டும் சலூன் கடைகளைக் கூட விட்டுவைக்கவில்லை.

சலூன் கடைகளை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் இன்றும் தொழிலாக நடாத்துகின்றனர்.

இவை கிளீன் செய்யப்பட்டாலே தமிழர்களின் மனத்தில் தென்னிலங்கை பற்றிய கருத்து கிளீன் செய்யப்படும்.



அண்மைய பதிவுகள்