இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சு வார்த்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவிப்பு

3 hours ago



இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன் பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இதனை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றார்கள்.

அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகிறன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது.

தொடர்ச்சியான பேச்சுக்களின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம்.

ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகு முறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்ட மிட்டுள்ளோம்.

ஒரு நாடாக தனியாக நடவடிக்கைகளை எடுப்பதை விட, ஒரு இராஜதந்திர அணுகுமுறை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் - என்றார். 

அண்மைய பதிவுகள்