நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும், தமிழரசுக் கட்சியும் வெல்வது கட்டாயம்.-- மனோகணேசன் தெரிவிப்பு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்குத் தீர்வாக முன்வைத்துள்ள ஒரே யோசனை,
2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னெடுப்போம் என்பதாகும்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த யோசனையை நாம் வரவேற்கின்றோம்.
அநுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலை நாம் செய்யவில்லை.
புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கபட வேண்டும் என நாம் எண்ணுகின்றோம்.
அதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில், இந்த உத்தேச புதிய அரசமைப்பை உருவாக்கும் சர்வகட்சி கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வெற்றுக் காசோலை தரவும் நாம் தயார் இல்லை.
புதிய பத்தாவது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று உத்தேச தேசிய கலந்துரையாடலில் பங்கேற்று,
நமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை புதிய அரசமைப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும், வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவது காலத்தின் கட்டாயம்.
இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
(2015-2018) நடந்த நல்ல பல விடயங்களில் ஒன்று, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சம பல தீர்வுகளைத் தேடும் புதிய அரசமைப்பு ஒன்றைக் கலந்துரையாடி உருவாக்கும் பணியாகும்.
அது ஒரு சர்வ கட்சிப் பணி.
2015 ஆம் ஆண்டு, சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமித்த வழிகாட்டல் குழு, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், கலந்துரையாடி, வாத விவாதம் செய்து, குறைந்தபட்ச பொது உடன்பாடுகளில் கருத்தொற்றுமை கண்டு முன்னெடுத்தது.
இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்தது.
இன்னும் பல துறைசார் உப குழுக்ளையும் தனக்கு உதவியாக நியமித்தது.
அந்த வழிகாட்டல் குழுவில் இலங்கையின் தேசிய இனங்களையும், அரசியல் சித்தாந்தங்களையும் பிரதி நிதித்துவம் செய்யும் சர்வகட்சி பிரதி நிதிகள் நியமிக்கப்பட்டனர்.
வழிகாட்டல் குழுவுக்கு அன்றைய பிரதமர் ரணில் தலைமை தாங்கினார்.
ஜே.வி.பி. சார்பில் இன்றைய ஜனாதிபதி அநுர, தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் நான் (மனோ கணேசன்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மறைந்த இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந் திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிஷாத் பதியு தீன் மற்றும் தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, டிலான் பெரேரா, ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் உட்பட இன்னும் பலர் இக்குழுவில் இடம்பெற்றனர்.
சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம், மலையக இலங்கை மக்கள் சார்பாக விரிவான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டு, கலந்துரையாடி மிகச் சிறப்பாக நடந்த இந்தப் பணியை, அதன் இடைக்கால அறிக்கை வந்ததும், திட்டமிட்டு அரசியல் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை குழப்பியது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சார்பில் அன்று வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றவர்கள்.
கடந்த மாதம் வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் ஆட்சியிலே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன மற்றும் பிரபல அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க ஆகியோராகும்.
வழிகாட்டல் குழுவின் செயற்பாட்டைக் குழப்ப, இந்த இனவாத ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனை கும்பல் பயன்படுத்திய கோஷம் "பிரபாகரன் ஆயுத பலத்தால் பெற முடியாததை, சம்பந்தன் பேச்சு வார்த்தையால் பெற முயல்கின்றார்" என்பதாகும்.
இந்தக் கும்பலுக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால. இரகசிய ஆதரவு வழங்கி, 52 நாள் திருட்டு அரசில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தது வரை அந்த அலங்கோல வரலாறு தொடர்ந்தது.
அத்துடன் அந்தப் புதிய அரசமைப்பை எழுதும் "வழிகாட்டல் குழு"செயன்முறை இடை நின்றது.
இன்று. இனவாதிகள் அரசியல் பரப்பில் கணிசமாக இல்லை.
ஆகவே, நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த. புதிய அரசமைப்பை எழுதும் சர்வகட்சிப் பணியைத் தொடரப் போவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா? இல்லையா? என்பதைத் தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த நோக்கில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவது காலத்தின் கட்டாயம்.
இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்." என்றுள்ளது.