ரஷ்ய - உக்ரைன் போர் சிறிலங்கா படைக்கு ஒரு பாடம்
யாழ்.முகமாலைப் பகுதியில் பல தடவைகள் சிறிலங்கா கூலிப்படையினர் விடுதலைப் புலிகளிடம் வாங்கிக்கட்டினர். முகமாலையில் முன்னேறப் பார்க்கும் ஒரு பட்டாலியன் சிறிலங்கா கூலிப்படையினரை பொக்ஸ் தாக்குதலில் விடுதலைப் புலிகள் வெற்றி காணுவர். விடுதலைப் புலிகளின் தாக்குதலை மிருகத்தனமான தாக்குதல் என அன்று யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த சந்திரசிறி தெரிவித்தார்.
இவர்களை வீரர் என ரஷ்ய - உக்ரைன் போரில் பயன்படுத்தி இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்.
ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கை இராணுவம்
ரஷ்ய - உக்ரைன் போரில் பலிக்கடா ஆக்கப்படும் சிறிலங்கா படையினர் தொடர்பில், இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பாராளுமன்ற உறுப்பினர், போரில் இருந்து தப்பி வந்தவர் என மூன்று தரப்பும் சொல்வதைப் பார்த்தால் நிலைமை படு பயங்கரமாக இருப்பது தெரிகிறது.
போரில் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கும் இலங்கை கூலிப்படையினரின் விபரம் முழுமையாகத் தெரியவில்லை.
வன்னி இறுதிப் போரில் சிறிலங்கா படையினர் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரம் இரகசியம் காப்பது போல் ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா கூலிப்படைகள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரமும் வெளிவராமல் இரகசியம் காக்கப்படும் என்பது உண்மை.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கருத்து
ரஷ்ய- உக்ரைன் போர் முனையில் சுமார் 1000 இலங்கைக் கூலிப்படையினர் இருப்பதாக அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களின் தகவல்கள் தெரிவிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஜ.டி) தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், ரஷ்ய- உக்ரைன் போர் முனைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு சிப்பாய்க்கு தலா 3 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுபவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து செயற்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர், இலங்கையில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஆட்சேர்ப்புகளை ஒருங்கிணைத்து வருகின்றார். ரமேஷ் என்ற மற்றொருவரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆட்சேர்ப்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ரஷ்ய மொழியில் உள்ளது.
ரஷ்ய போர் முனையில் இருந்த இலங்கை முன்னாள் இராணுவத்தினர் மூவர் இலங்கை திரும்பியுள்ளனர்.
இந்த மோதலில் 14 ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னர் 8 பேர் இறந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் சொல்வதைப் பார்த்தால் ஓய்வு பெற்ற சிறிலங்கா கூலிப் படையினர் ஆயிரக் கணக்கில் ரஷ்ய - உக்ரைன் போர் முனையில் நிற்கிறார்கள் என்பது தெரிகிறது. எதிர்வரும் நாள்களில் இவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதும் தெரிகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் கருத்து
இதேவேளை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300 இற்கு அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காமினி வலேபொட மேலும் தெரிவிக்கையில், 200 இற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். ரஷ்ய - உக்ரைன் மோதலுக்காக இலங்கையில் இருந்து 800 இற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிந்த விடயம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தெரியாதா? மேல்மட்டம் இந்த வேலையைச் செய்வதால், தடுக்கவும் முடியாது.
தப்பி வந்த சிறிலங்கா படை வீரர்
ரஷ்ய உக்ரைன் சண்டை இடம்பெறும் எல்லையில் சிறிலங்கா படையினர் நின்று போரிடுவதாக அங்கிருந்து தப்பி வந்த சிறிலங்கா படையைச் சேர்ந்த ஒருவர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைனின் டொனக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதல்களிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் கூலிப்படைகளாக செயற்பட்டு வருகின்றனர். அவர்களில் 200 இற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். 200 இற்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓய்வுபெற்ற முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகளே என்னையும் ரஷ்ய உக்ரைன் போர் முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர். அதற்காக 1.6 மில்லியன் ரூபாவை செலுத்தினேன்.
முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனத் தெரிவித்தனர். இந்தியப் பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி, ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவரே எங்களை வரவேற்றார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை கூலிப்படையில் இணைப்பதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவார்கள். சட்டத்தரணி என்று தோற்றமளித்த இந்தியப் பெண் ஒருவர் எங்களுக்கு உதவினார்.
ஆனால் அங்கு ஒப்பந்தத்துக்கு மாறாக இருந்தது.
என்னுடன் இருந்தவர்களில் 200 இற்கு மேற்பட்டோர் போரில் இறந்துவிட என்னையும் போரில் ஈடுபடுத்தினார்கள். நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்றார்.
சிறிலங்கா கூலிப்படையினர் ரஷ்ய - உக்ரைன் போர் முனையில் நிற்பது என்பது, விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிவாகை சூடியவர்கள்
என்ற பெயரில தான் நிற்கிறார்கள். போகப் போகத் தான் தெரியும் அவர்களின் வீரம்?