மே18 துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு அறிவிப்பு.

மே 18 நாளை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இறுதிப் போரில் தமிழ் மக்கள் மிகக் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில் உலகமே நினைவு கொள்வதற்கு தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியார் அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

ஏற்கனவே வடமாகாண சபையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இதனை உணர்வு பூர்வமாக தமிழர் தாயகம் எங்கும் அனுஷ்டிக்க அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளோடும் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

இந்த நாளில் முள்ளிவாய்க்காலில் சென்று நினைவேந்தக் கூடியவர்கள் வழமை போன்று முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் வேண்டி நிற்கின்றோம்.

அதேநேரம் அங்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டி நிற்கின்றோம்.

அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிகர் வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விடுமாறும் கறுப்புப் பட்டியலுடன் கடமைகளில் ஈடுபடுமாறும் கோருகின்றோம்.

அன்றைய தினத்தில் எமது தெருக்களை, பொது இடங்களை, வீட்டின் முன்னுள்ள வீதிகளை துப்பரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு நேர உணவாக உண்பதற்காக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் முன்வருவோம்.

மேலதிக கல்வி நடவடிக்கைகளை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் அன்றைய தினம் நிறுத்தி எம் இளையோர்களுக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவோம்.

இந்தக் காலப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம்களில் பங்கேற்போம். வலி சுமந்த குடும்பங்களுக்கு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், ஆறுதல் அளிப்போம்.

இந்த தமிழ்த் தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராக நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்ந்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்றுள்ளது.

அண்மைய பதிவுகள்