கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக அண்மைக் காலமாக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மையுள்ள தேசம் என்ற வகையில் எமது வளங்களைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம், நெடுந்தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு உரிமையாளர்களுக்கு 4 மில்லியன் மற்றும் 8 மில்லியன் ரூபாய் அபராதங்களை விதித்தது.
7 கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை. அண்மை மாதங்களில் மன்னாருக்கு வடக்கே பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், தெற்கே பல இழுவைப் படகுகளை காணமுடிவதாக ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இராமேஸ்வரத்தில் உள்ள தமிழக கடற்றொழிலாளர் சமூகங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.
அத்துடன், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை, சுங்கம், கடற்றொழில் துறை மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள், அண்மையில் கடற்றொழிலாளர் சமூகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.