கஞ்சா மூடைகளுடன் நடுக்கடலில் நின்ற 3 யாழ். வாசிகளை கைது செய்து இந்திய கடலோரக் காவல் படை விசாரணை.
கஞ்சா மூடைகளுடன் நடுக்கடலில் நின்ற 3 யாழ். வாசிகளை கைது செய்து இந்திய கடலோரக் காவல் படை விசாரணை
தொண்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவரை படகுடன் கைது செய்த இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை நடத்திய விசாரணையில் கஞ்சா அடங்கிய மூட்டைகளை நடுக்கடலில் வைத்து சட்டவிரோதமாக தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கிச் செல்லக் காத்திருந்தபோது நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இராமநாதபுரம், தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த ஒரு இலங்கைப் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களைக் கைது செய்த இந்திய இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்திய கடலோரக் காவல்படை மண்டபம் முகாமில் வைத்து மீனவர்களிடம் முழுமையான விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கை ஈடுபடுவதற்காக இந்திய கடல் பகுதியில் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இராமநாதபுரம் மாவட்ட உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை உளவுத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஜன் என்பவருக்குச் சொந்தமான படகில் உடுத் துத்துறை பகுதியைச் சேர்ந்த நிரோஜன், திபாகரன் உள்ளிட்ட மூவர் படகில் உள்ள பிடிபட்டுள்ள நிலையில் படகில் உள்ள ஒருவரான திபாகரன் முக்கிய கஞ்ச கடத்தல்காரர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், தொண்டி அடுத்த மணல்மேல்குடியைச் சேர்ந்த மர்ம நபர்களிடம் இருந்து கஞ்சா மூடைகள் வாங்கிச் செல்லவதற் காக தொண்டியில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரம் நடுக்கடலில் காத்திருந்தபோது திடீரென படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல் படை அவர்களைக் கைது செய்துள்ளது.
இலங்கையர்கள் மூவரிடமும் செல்போன்களை பறிமுதல் செய்து அதன் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் யார் இவர்களுக்கு கஞ்சா வழங்க இருந்தார்கள் என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் கஞ்சா மூடைகள் கைப்பற்றப்படவில்லை எனவும் விசாரணைக்கு பின்னர் இவர்கள் மூவரும் மண்டபம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.