கடந்தகால தயக்கங்களைக் கடந்து இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்ற வேண்டும்.-- சந்தோஸ் ஜா வேண்டுகோள்
கடந்தகால தயக்கங்களைக் கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் இரு நாடுகளினதும் தலைவிதிகள் பின்னிப்பிணைந்தவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளையும் பிணைக்கும் பகிரப்பட்ட புவியியல் வரலாறு மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் இணைந்து வளரவேண்டும் செழிப்படைய வேண்டும் நாங்கள் வரலாறு புவியியல் மற்றும் எதிர்காலத்தினால் இயற்கையாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஈடுசெய்ய முடியாதவர்கள் இன்றியமையாதவர்கள் மற்றும் பிரிக்க முடியாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிளவுகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.