தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பிரான்ஸில்.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் பொண்டிப் பிரதேசத்தில் நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடரைப் பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் ஏற்றிவைக்க, மாவீரர் பொதுப் படத்துக்கான ஈகைச் சுடரை கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் நிலவனின் சகோதரி ஏற்றிவைத்து, மலர் வணக்கம் செலுத்தினார்.
தேசத்தின் குரல் பாலாவின் திருவுருவப் படத்துக்கான ஈகைச் சுடரை முல்லைத்தீவு, விசுவமடு, 12 ஆம் கட்டைச் சந்தியில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் மரியாவின் சகோதரன் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொண்டி தமிழ்ச் சோலை, சென்டனி தமிழ்ச் சோலை, நுவசி சாம் தமிழ்ச்சோலை ஆகிய பள்ளி மாணவர்களின் எழுச்சி நடனம் மற்றும் கவிதை, பேச்சு என்பவற்றுடன் தமிழர் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் செங்கதிர் ஆற்றினார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.