யாழ்.வடமராட்சி, யாழ். நகர்ப் பகுதி மற்றும் மன்னார் சௌத்பார் கடற்பரப்பு என மூன்று பகுதிகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 week ago



யாழ்ப்பாணம் வடமராட்சி, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி மற்றும் மன்னார் சௌத்பார் கடற்பரப்பு என மூன்று பகுதிகளில் நேற்றுச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடமராட்சியில்

வடமராட்சி - உச்சிக்காடு கரணவாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம் குணசேகரம் (வயது - 65) என்ற முதியவர் தனிமையில் வசித்துவந்த நிலையில் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரில்

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் நேற்றுச் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்த சதாசிவம் ராசு (வயது 59) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். நகரில்

இதேவேளை, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள வணிக நிறுவனமொன்றில் குடும்பத் தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தையும் மகனும் ஒரே கடையில் பணிபுரிந்து வரும் நிலையில், மகன் கடைக்கு வந்தபோது தந்தை மயங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் முன்னரேயே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறப்புக்கான காரணத்தை அறிவதற்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.