இலங்கை ஜனாதிபதியின் இந்திய, சீனப் பயணத்தில் ஒப்பந்தங்கள் ஏதாவது கைச்சாத்தாகினவா? கேள்விகளை அடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிறது
அநுரகுமார திஸாநாயக்கவின் இந்தியப் பயணத்தின் போது இரகசிய ஒப்பந்தங்கள் ஏதாவது கைச்சாத்தாகினவா? என்பது தொடர்பிலும், ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பிலும் கேள்விகளை அடுக்க பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றதென அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடக சந்திப்பை நடத்தி தெளிவுபடுத்தியிருந்தார்.
இலங்கையின் அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது உட்பட இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே இந்தப் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், எட்கா ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்தே, இந்தப் பயணத்தின் போது இரகசிய ஒப்பந்தங்கள் ஏதேனும் கைச்சாத்தாகினவா? என்பது தொடர்பில் கேள்விகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
எட்காவுக்கு எதிராக முன்னர் போர்க் கொடி தூக்கியிருந்த ஜே.வி.பி.யினர் தற்போது அதனை ஏற்கத் தயாராகி வருகின்றனர் என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
எட்காவை மறைமுகமாக ஏற்கும் வகையிலேயே இலங்கை, இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மறுசீரமைப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளன.
எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அது தொடர்பிலும் கடுமையான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவர் இதுபற்றி கேள்வி எழுப்பக்கூடும்.
அவ்வாறு இல்லாவிட்டால் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைக்கப்படக்கூடும். நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும்.
அத்துடன், ஜனவரி முற்பகுதியில் ஜனாதிபதி சீனாவுக்குச் செல்கின்றார்.
அது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் வினவக்கூடும் என்றும் தெரிய வருகின்றது.