அமெரிக்கா உதைபந்தாட்டத் தொடரில் 23 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறி யுள்ளது கொலம்பிய அணி.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் அடித்த பந்தை ஜெபர் சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
முதல் பாதியில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் 75 ஆவது நிமிடத்தில் பெடரிக்கோ வால்வர்டே, 85 ஆவது நிமிடத்தில் மனுவெல் உகார்ட், 86 ஆவது நிமிடத்தில் ஜோஷ் கிமென்ஸ், 89 ஆவது நிமிடத்தில் மாக்சிமிலியானோ அராஜோ ஆகியோர் இலக்கை நோக்கிப் பந்தை கொண்டு சென்ற போதிலும் கோலாக மாற்ற முடியாமல் போனது. கடைசி வரை போராடிய போதிலும் உருகுவே அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2001 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் கொலம்பியா பட்டம் வென்றிருந்தது.
இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் வரும் 15 ஆம் திகதி ஆர்ஜென்ரீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது கொலம்பியா அணி. இந்த ஆட்டம் புளோரிடாவில் உள்ள மியாமி கார்டன் மைதானத்தில் இலங்கை நேரப்படி அதிகாலை 5. 30 மணிக்கு நடைபெறுகிறது.