வடக்கு அரச திணைக்களங்கள் ஊழல் நிறைந்தது

6 months ago

பஸ்சின் கண்டக்டராக வடிவேலு நடித்த ஒரு படத்தில், அந்த பஸ்சிற்கு பின்னால் இது எங்கள் சொத்து என்ற வசனம் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை படித்த பஸ்சில் ஏற வந்த ஒருவர் கண்டக்டரான வடிவேலுவை பஸ்சில் இருந்து இறக்கி பஸ் பின்னே கூட்டி வந்து அந்த வசனத்தைப் படித்துக் காட்டி இது என்னுடைய பஸ் என்று எழுதப்பட்டுள்ளது எனவே இந்த பஸ்சை நான் கொண்டு போகப் போறேன் என்று வடிவேலுடன் முரண்படுவார்.

இந்த நபர் போல் தான் அரச உத்தியோகத்தர்கள் நினைக்கிறார்களா? அதுதான் என்னவோ 5000 இற்கு மேற்பட்ட அரச வாகனங்களைக் காணவில்லை.

இன்றும் தேடுகிறார்கள் கண்டுபிடிக்கவில்லையாம்.

5000 வாகனங்கள் காணாமல் போகும் மட்டும் என்ன செய்தார்கள் கூட்டுக்களவானிகள்.

அரச சொத்து மக்கள் சொத்து அதனை எல்லோரும் பாதுகாக்க வேண்டும்.

அரச சொத்துகளை பாதுகாக்க தவறியதால் தான் இன்று நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி நிற்கிறது.

இதனை அரச திணைக்களங்கள் எப்பொழுது தான் கவனத்தில் எடுக்குமோ தெரியவில்லை.

யாழ்.நகரில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் வேலைத்தள பகுதியில் இருப்பு பற்றி அங்கே இருப்பவர்களுக்கு கவலை இல்லை. அதனால் தான் நிதி மோசடி இடம்பெறுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான பொது படிவம் - 66 இற்கமைய களஞ்சிய கணக்கெடுப்பின் படி 31.12.2023 இன் இறுதி மீதிக்கமைவாக மர வேலைப்பகுதியில் 77 இல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் குறைவாகவும், 06 இல் பொருட்கள் உபகரணங்கள் மேலதிக இருப்புக்களாகவும், உலோக வேலைப் பகுதியில் 95 இல் உபகரணங்கள், பொருட்கள் குறைவாகவும், 03 இல் உபகரணங்கள் பொருட்கள் மேலதிக இருப்புகளாகவும் காணப்படுவதாக கணிப்பீட்டுச் சபையினரால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருப்பு இழப்புக்கள் பதிவேடுகளில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.

24.09.2020 ஆம் திகதிய கடிதம் மூலமாக மாநகர சபை கணக்காளரினால் வேலைத்தள முற்பணக் கணக்கு மீதியானது தொடர்ச்சியாக சில வருடங்களாக அதிகரித்து காணப்படுவதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

75 இலட்சத்துக்கு மேல் ஆட்டையைப் போட்டதாக தெரிவிக்கிறார்கள். 

எனவே குறித்த களஞ்சிய கணக்கெடுப்பு அறிக்கைக்கு அமைவாகவும் மாகாண நிதிப்பிரமாணம் 104 (1) இதற்கமைவாகவும் குறித்த பொருள் இழப்பினை ஆராயும் பொருட்டு குழு ஒன்றினை நியமித்து அதன் பெறுபேற்று அறிக்கைக்கமைய சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று தெரிவிக்கிறார்கள்.

அரச திணைக்களங்களில் வேலை செய்ய வெளிக்கிட்டால் அவருக்கு தடைகள் நிறைய வருமாம், வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பவர்கள் ஊழல் இடம்பெறுவதையும் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.

நாளை இந்த இழப்பு உங்கள் பிள்ளைகளின் முதுகில் வந்து விழுந்து பாரத்தை சுமக்க முடியாமல் சுமப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இருப்பு குறைவைப் பற்றி கதைக்கக் கூடாதாம் கதைத்தால் அவ்வளவு தான் இருப்பு குறைவடைய காரணமானவர்கள் புதிதாக வந்தவர்களை பழசாக முதல் உள்ளக இடமாற்றத்தை செய்வார்களாம். 

யாழ்.நகரில் உள்ள தனியார் கடைகளில் போய்ப் பாருங்கள் ஒவ்வொரு நாளும் கடைகளை மூடும் போது பொருள் இருப்பை சரி பார்த்து தான் செல்வார்கள்.

ஏதாவது குறையுதா என்று பார்ப்பதற்காக இந்த நடைமுறையை ஒவ்வொரு நாளும் பின்பற்றுவார்கள்.

 அதனால் தான் தனியார் கடை முதலாளிகள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அரச துறை?

இந்த அரச திணைக்கள இருப்பு குறைவதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை போலும், ஓடிட் எல்லாம் ஓட முடியாது போலும்.

இனியாவது ஓடிப் பாருங்கள். நாட்டில் கடன்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பொறுப்புள்ளதாக அரச திணைக்களங்களை மாற்றுங்கள்.

அண்மைய பதிவுகள்