யாழ்.மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு.-- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக, இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்தில் இதுவரை 110 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 28 பேரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவம னையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் (நேற்றுமுன் தினம் தொடக்கம் நேற்றுவரை) பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 6 நோயாளர்களும், யாழ். போதனா மருத்துவமனையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.
எலிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து' இடம்பெற்று வருகின்றன.
நேற்றுவரை ஏறத்தாழ 7 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் கால்நடைகளில் எலிக்காய்சல் தொற்று உள்ளதா என்று அறிவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.