கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான நிலையில் 24 நாட்களின் பின்னர் தப்பிய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கிளிநொச்சி -பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிங்கராஜன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, குறித்த நபரை கடந்த 2ஆம் திகதி முதல் காணவில்லை என்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை காலை காணாமல் போனார் என்று தேடப்பட்டு வந்த நபர் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
சரணடைந்த அவர், தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து சித்திரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
கடத்தியவர்கள் தன்னை ஒரே இடத்தில் வைத்திருக்காது வெவ்வேறு இடங்களில் அடைத்து வைத்திருந்தனர் என்று சரணடைந்த நபர் கூறியுள்ளார்.
சரணடைந்த நபர் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.