ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார்.
இந்த நாட்டை பொருளாதார அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்கு செய்யவேண்டிய பிரதான கடமையொன்று உள்ளது என்பதை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.
75 வருடங்களாக இனங்களுக்கிடையில் இருந்த உறவை சீர்குலைத்து, துருவமயப்படுத்தி இருக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்துள்ள, உச்சநீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கி இருக்கின்ற ஒற்றையாட்சி அரசமைப்பு ஒழிக்கப்பட்டு, தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் இந்த நாட்டின் முன்னேற்றத்தில் சமத்துவமாக பங்கெடுக்கக்கூடிய வகையில் சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும்.
அவ்வாறு செய்வதன் ஊடாக மட்டுமே நிரந்தர முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒற்றையாட்சி முறைமையில் உள்ள தோல்விகளை ஒப்புக்கொண்டு ஜனாதிபதி தன்னுடைய பதவிக் காலத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து, தமிழ்த் தேசமும்,சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்குகின்றார் என்றார்.