ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் 300 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பாதிப்பு.-- ஐ.நா உதவிக்குழு தெரிவிப்பு

1 month ago



ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு சட்ட நடவடிக்கைகளால் 300 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் உள்ள ஐ. நா. உதவிக்குழு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021இல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர்.

தலிபான்களின் ஆட்சியில் பத்திரிகையாளர்களின் நிலை தொடர்பில் ஐ. நா. உதவிக்குழு மற்றும் மனித உரிமைகள் அலுவலகம் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த ஆவணத்தில், 2021இல்         தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 300இற்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் உரிமை மீறல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான உளவியல் சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான கைது வழக்குகள் இதனை வெளிப்படுத்துகின்றன.

ஆப்கானிஸ்தானின் ஊடகத்துறை மூன்று ஆண்டுகால தலிபான் அரசாங்கத்தின் கீழ் அதிர்ச்சி தரும் வகையில் சுருங்கியுள்ளது.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள், தணிக்கை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் செயல்படுகின்றன.

2021இல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கடந்த செப்ரெம்பர் வரையிலான காலகட்டத்தில் 336 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதில் 256 பேர் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.