குளங்களை ஆக்கிரமித்து வருகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்- மு.சந்திரகுமார் தெரிவிப்பு.
குளங்களை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை குறைத்து வருகின்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (27) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பொது அமைப்புக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் முறைப்பாட்டுக்கு அமைவாக, தனி நபர் ஒருவரால் குளம் ஆக்கிரமிக்கப்படுவதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது உலகம் மிகப்பெரும் பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுத்துள்ளது. நீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றார்கள். வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக வற்றுகிறது. இதனால் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எங்கள் மத்தியில் இருக்கின்ற குளங்களையும் நாம் பாதுகாத்து பேணுவதை விடுத்து அதனை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவது என்பது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கும்.
எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் அனைவரினதும் மிகப்பெரிய பொறுப்பு. முன்னோர்கள் குளங்களை உருவாக்கி அதனை பாதுகாத்து எங்களிடம் கையளித்ததன் காரணமாகவே நாம் அதன் பயனை அனுபவித்து வருகிறோம். எனவே நாமும் இவற்றை அவ்வாறே பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
10 அடி கொள்ளளவு கொண்ட கனக்காம்பிகை குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் உள்ளன. அந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரும் இக்குளம் காரணமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இக்குளத்தினை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
குளத்தின் பின்பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டது. தற்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு குளத்துக்குள் மண் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆகவே, குளத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.