பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை எந்தவொரு வகிபாகத்தையும் எடுப்பதில்லை என்று தீர்மானம்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை எந்தவொரு வகிபாகத்தையும் எடுப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ் மக்கள் பொதுச்சபை தன்னை போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலை ஈழத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்தகளமாக கையாள்வதற்கு முன்வந்தது.
"இந்த முயற்சியில் வெற்றி பெற்றது மாத்திரமல்லாது ஒரு புதிய அரசியல் அணுகுமுறைக் கூடாக ஒடுக்கப்படும் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமையையும் திரட்சியையும் தேசமாக முன்நிறுத்தலாம் என்ற மாதிரியையும் உலகின் முன் துணிவுடன் காட்டியுள்ளது.
"ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொதுச் சபை ஒரு தேர்தலாகவோ, பதவிக்கான போட்டியிடலாகவோ கொண்டிருக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும் மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயல்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளது என நாங்கள் அறிவோம்.
"இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களின் இருப்புக்கான - பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று தேசத்துக்காக ஒருங்கிணைக்க கால அவகாசமோ, சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச் சபைக்கு தற்போதைய நிலையில் இல்லை.
"இதேவேளையில் பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் போட்டி அரசியலில் தமிழ் மக்கள் பொதுச்சபை வரித்துக் கொண்ட "தேச மாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்" என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனையும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.
"இதனடிப்படையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை எந்தவொரு வகிபாகத்தையும் எடுப்பதில்லை என்று சனிக்கிழமை (05.10.2024) பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானித்துள்ளது" என்றுள்ளது.