தமிழரசுக் கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் சபைக்கே உள்ளது, முன்னாள் எம்.பி சி.சிவமோகன் தெரிவிப்பு

3 hours ago



தமிழரசுக் கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச் சபைக்கு மாத்திரமே உள்ளது  அதனை மீறினால் செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

கட்சியின் யாப்பே அதன் முதுகெலும்பு. அதன் கொள்கைகள் அது பயணிக்கும் வழித்தடம். அந்த அடிப்படையில் ஒரு கட்சியை நிர்மூலமாக்குவதற்கு யாப்பை மீறிச் செயற்பட்டால் அதனை முடக்கலாம்.

இன்று எமக்கான சந்தேகம் இதுவே. திருமலையில் கட்சி மீது தொடரப்பட்ட வழக்கின் மூலம் எமது பொதுச் சபை முடக்கப்பட்டுள்ளது.

அப்போது இனிமேல் யாப்பு மீறல் செய்யமாட்டோம் என்று பேசப்பட்டது. ஆனால் மீண்டும் அதே யாப்பு மீறலை மத்திய செயற்குழு செய்கிறது என்றால் இதன் நோக்கம் என்ன?.

இந்த பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளை நடத்தியவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய விடயம்.

மத்திய குழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக மாற்றக்கூடாது.

கடந்த ஒரு மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராசாவை கதிரையில் இருக்க வேண்டாம். உங்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்ன நபர் மத்திய குழுவிலேயே இல்லாத ஒருவர்.நிலைமை அவ்வாறே உள்ளது.

இதேவேளை பதில் செயலாளர் என்ற போர்வையில் ஒருவர் இருந்து கொண்டு யாப்பை மீறிச் செயற்பட்டமையாலேயே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு தில் இருந்தால் அந்த வழக்கை மீளப்பெற்று பொதுச்சபை இயங்குவதற்கு இடம்தரவேண்டும்.

அதைச் செய்தாலே மாபியாக்களிடம் இருந்து தமிழரசுக் கட்சியை மீட்க முடியும்.

கட்சியின் பொதுக்குழு கூடும்போது தேசியப் பட்டியலை நாங்கள் மீள் பரிசீலனை செய்வோம்.

கட்சியை மீட்பதற்காக மாத்திரமே நான் போராடுகிறேன். மத்திய குழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவுக்கு இல்லை என்று கட்சி யாப்பின் விதி 7 கூறுகிறது.

அந்த அதிகாரம் பொதுச் சபைக்கே இருக்கிறது.

கடந்த கூட்டத்தை விட்டு நான் வெளியேறிய பின்னர் என் மீது குற்றத்தை முன்வைத்து என்னை இடை நிறுத்தியதாக அவர்கள் பிரசாரம் செய்தார்கள்.

என்னை நீக்குவதற்கான அதிகாரம் பொதுச் சபைக்கே இருக்கிறது.

எனவே என்னை நீக்கியமை தொடர்பான உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி 72 மணித்தியாலங்களில் பதில் அளிக்குமாறு கோரி பதில் செயலாளருக்கு நான் கடிதம் அனுப்பியிருந்தேன்.

அதன் பிரதிகள் தலைவர் மாவைசேனாதிராசா, பதில் தலைவர் சிவஞானம், தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறிதரன் ஆகியோருக்கும் அனுப்பியிருக்கிறேன்.

வெறுமனே வாய்ச் சவடால்களால் கட்சியின் பதவிகளை பறிக்க முடியாது. அதற்கென்று ஒழுங்குமுறை உள்ளது. - என்றார்.