நினைவில் நிற்கும் ஆம்சுட்டிராங்கு!

6 months ago

பகுசன் சமாச கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் வழக்கறிஞராகவும் பலரது முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் திகழ்ந்த ஆமிசுட்டிராங்கு (K.Armstrong) படுகொலை செய்யப்பட்ட செய்தி பலருக்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. வளர்ந்து வரும் தலைவரான அவர் கொலையுண்டு மறைந்த செய்தி பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் தலைவர்களுக்குரிய நிறைகுறைகளைப் போல் செயற்பட்டுத் தொண்டர்களின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கியவர். இவரைப்பற்றி அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. இப்பொழுது இவரின் துயர மறைவு அந்நினைவலைகளை எழுப்பியுள்ளது.

அவருடைய அறிமுகம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது மயிலாப்பூரில் மிதியூர்தி (auto rickshaw) ஓட்டுநராக இருந்தார். என்னிடம் ஒருநாள், “ஐயா, உங்களிடம் ஓர் அறிவுரை கேட்க வேண்டும்” என்றார். “என்ன செய்தி? என்ன தயக்கம்?” என்றேன். “எதற்கு என்னிடம் கேட்கிறீர்கள்? நான் கூறியது உங்களுக்கு உடன்படாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றேன்.

“நீங்கள் வெறும் வண்டியோட்டிபோல் என்னைக் கருதுவதில்லை. சிலர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இல்லாமல் மதிப்பாக நோக்குவீர்கள். என் கருத்துகளைச் செவிமடுத்துப் பாராட்டுவீர்கள். மேலும் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம் என்றீர்கள். எனவே, எதிர்கால நலன் குறித்து உங்களிடம் பேசலாம் என முடிவிற்கு வந்தேன்.” என்றார்.

“நான் இரு நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன். இதற்கு முன்பு ஓரெழுத்து எழுத்தாளர், தான் கட்சி அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் வாசகர்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தன் இதழ் மூலம் கேட்டிருந்தார்.

நான் அவருக்கு, “நீங்கள் எந்தக் கட்சியில் சேர விரும்புகிறீர்கள் என்று தெளிவாகக் கேட்டால், விடையிறுக்கலாம். பொதுவாகக் கேட்டால், வாசகர்கள் நீங்கள் சேர விரும்பும் கட்சி குறித்து ஊகமாகக் கருதி அதற்கேற்பத் தங்கள் கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவார்கள். இவ்வாறு பொதுவாகக் கேட்பது வாசகர்களை அவமதிக்கும் ஆணவச் செயலுமாகும். வாசகர்களை மதிப்பதாக இருந்தால் எந்தக் கட்சியில் சேர விரும்புகிறீர்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.” என எழுதிப் போட்டேன். நீங்களும் நீங்கள் சேர விரும்பும் கட்சி குறித்துத் தெரிவியுங்கள்.” என்றேன்.

மற்றொன்று “தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கம் ஒன்றின் தலைவரிடம் தேர்தலைப் புறக்கணிக்கும் திட்டத்தைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்று நீங்களும் இயக்கத்தினரும் சட்டமன்ற மக்களளவைகளில் பங்கேற்றுத் தொண்டாற்றுங்கள் என்றேன். இது குறித்து விளக்கவும் செய்தேன். அவர் அமைப்பிலுள்ள பிறரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறினார். மறுநாள் அவர் சந்தித்து என் கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால், இம்முறை தேர்தலைப் புறக்கணித்து விட்டு, அதற்கான பரப்புரையை மேற்கொள்ளாமல், பின்னர்த் தேர்தல் பங்கேற்பு குறித்து இயக்கத்தினரிடம் தெரிவித்து விட்டு அடுத்த தேர்தலில் இருந்து பங்கேற்போம் என்றார். அன்படி நடந்து இன்றைக்குக் குறிப்பிடத்தகுந்த தலைவராக விளங்குகிறார்” என்றேன்.

“நான் ஆணவமாக நடந்து கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட தலைவரைப் போல் புகழ் பெறுவேன்” என்றார்.

“அப்பா திராவிடர் கழக ஈடுபாட்டில் இருந்தமையால், நான் படிக்கும் பொழுதே அரசியலில் ஆர்வம் காட்டினேன்” என்றார்.

என்றாலும் தான் தங்கள் வகுப்பினர் முன்னேற்றத்திற்கான கட்சியிலேயே சேர விரும்புவதாகவும் அப்படிப்பட்ட கட்சிகளில் புரட்சிப் பாரதக் கட்சி இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் பகுசனக் கட்சியையும் முதலிடங்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“உங்கள் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசியலில் ஈடுபட விரும்புவது நல்லதுதான். ஆனால்,அதே நேரம் பிற வகுப்பார் நலனிலும் கருத்து செலுத்துங்கள்” என்றேன். வடக்கே எந்தக் கட்சி தொடங்கப்பட்டாலும் அந்த மாநிலத்தில் கிளைகள் தொடங்கப்படாவிட்டாலும் தமிழ்நாட்டில் அதன் கிளையைத் தொடங்கி விடுவார்கள். இது தவறு. என்றாலும் வழக்கமாக நிகழும் இதுகுறித்து இப்போது கூற விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கான தகுதியை வளர்த்துக்கொண்டு பகுசனக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு மதிப்பு இருக்கும். இல்லையேல் கீழ் நிலைப் பொறுப்புகளில்தான் இருப்பீர்கள். முதலில் சட்டப்படிப்பை முடியுங்கள். பிறருக்கு உதவுங்கள். அதன்பின் மதிப்பார்ந்த பதவிகள் தேடி வரும்” என்றேன்.

பகுசனக் கட்சி மீதான நாட்டத்தை வைத்துக்கொண்டு வெவ்வேறு அமைப்புகளில் ஈடுபட்டார். மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதைத் தெரிவித்த பொழுது வாழ்த்தினேன். மாமன்ற உறுப்பினரான பின்பு பகுசனக் கட்சியிலும் சேர்ந்து உயர்ந்தார். என்றாலும் பின்னர் அவருடனான சந்திப்பு நிகழவில்லை. அவர் பெரம்பூர் சென்றுவிட்டார். நான் மடிப்பாக்கம் வந்து விட்டேன். இருப்பினும் அவரைப்பற்றிய செய்திகள் வந்தால் படித்துப் பார்ப்பேன். அப்படி வந்த ஒரு செய்திதான் துயரச்செய்தியாய் அமைந்து விட்டது. இச்செய்தியால் ஏற்பட்ட நினைவலைகளையே துயரத்துடன் பதிந்துள்ளேன்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை” என்கிறார் திருவள்ளுவர்(குறள் 323). மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனார் மனிதர்களுக்கு உடம்பு, சொல், செயலால் ஏற்படும் பத்துத் தீமைகள் குறித்து விளக்குகிறார்.

 “கொலையே களவே காமத்தீ விழைவு

 உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்

பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்

சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்

வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்

பத்து வகையால் பயன்தெரி புலவர்”

(மணிமேகலை 24.125-131) என்பதே அவற்றைக் குறிப்பிடும் பாடல்.

இத்தீமைகளுள் முதலாவதாகக் கூறப்படுவது கொலையே.

“புலையும் கொலையும் களவும் தவிர்”என்கிறார் ஒளவையார்(கொன்றை வேந்தன்).

சொத்து, பணம், உறவு, குடும்பம், விரும்பாத் திருமணம், காதல், காமம், அரசியல், பதவி, பழிக்குப்பழி முதலியன தொடர்பான பல காரணங்களால் கொலைகள் நிகழ்கின்றன. இக்கொலைக்கு இரங்கல் தெரிவிப்போரும் துயரம் அடைவோரும் கொலை நிகழாத நாடாக நம் நாட்டை ஆக்க வேண்டும்.

இதையே நாம் செலுத்தும் அஞ்சலியாகக் கருத வேண்டும்.

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல, இதழுரை


அண்மைய பதிவுகள்