யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் எட்டாவது ஆண்டாக இடம்பெறுகின்ற கண்காட்சி
யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் எட்டாவது ஆண்டாக இடம்பெறுகின்ற 'சித்திர முத்திரைகள்' என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி இன்று காலை கல்லூரியில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நான்கு நாள்களுக்கு இடம்பெறவுள்ள இக் கண்காட்சியின் ஆரம்ப வைபவம் காலை 9.30 மணிக்கு கல்லூரி முன்றலில் இடம்பெற்றது.
திருமறைக் கலாமன்றத்தின் ஊடக,வெளியீட்டுப் பிரிவின் இணைப்பாளர் கி.செல்மர் எமில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஆசியுரையை கல்லூரியின் உப அதிபர் அருட்தந்தை செ.அன்புராசா அடிகளும், சிறப்புரையை திருமறைக் கலாமன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அ.அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரும் வழங்கினார்கள்.
தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இக் கல்லூரியின் ஆரம்ப கால சித்திரப் பாட ஆசிரியர்களில் ஒருவரான திருமதி ஜெயராணி அம்பலவாணர் உரையாறினார்.
இதன் தொடர்ச்சியாக பிரதம விருந்தினர் அவர்கள் கல்லூரிக்கு ஆற்றிய பணிகளுக்கு மதிப்பளித்து கல்லூரிச் சமூகத்தால் பொன்னாடை போர்த்தி,மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் அவர்களால் கண்காட்சி நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாணவர்கள்,ஓவிய பாட ஆசிரியர்கள், ஆர்வலர்கள், திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள்,ஆதரவாளர்கள் என பலரும் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.
கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப் பாடத்தைப் பயில்கின்ற மாணவர்களதும் அயல் பாடசாலைகளில் பயில்கின்ற மாணவர்களதும் ஆக்கங்களைக் கொண்டதுமான இக்கண்காட்சி தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.