தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதாக எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதாக ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.
இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
எமது பாராளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன்.
அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன.
அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்னை என்ற ஒன்று இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.
எனவே இனம் சார்ந்த விடுதலையினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள்.
எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்தும் பொது விடயங்களில் ஒன்றாக குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் வடக்கு-கிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அத்துடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்ற இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி பேசிய போது ஒரு மணிகூட வெளியில் இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் இன்று நிலைமை மாறி இறக்குமதி செய்யும் சூழல் வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர்.
எனவே இந்த நிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே அரசாங்கம் நிதானமாக செயற்பட வேண்டும்.
இன்று சாதாரண மக்கள் கூட தேங்காய் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்ற வேண்டும் என்றார்.