கிளிநொச்சியில் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் மணல் மாபியா கும்பலால் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சிப் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சகிதம் பணியிலிருந்த போது தாக்கப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் நாளான கடந்த 13ஆம் திகதி அன்று கரைச்சி பிரதேச சபையின் சபை நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்பாள்குளம் 2ஆம் குறுக்குத்தெரு வீதியின் புனரமைப்பு வேலைக்காக பறிக்கப்பட்ட கிரவலினை கரைச்சிப் பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தருடன் தாக்குதலுக்குள்ளான தொழில்நுட்ப உத்தியோகத்தர் கூட்டளவு மேற்கொண்டிருந்தார்.
அவ்வேளை அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட குழு தாக்குதலை நடத்தியுள்ளது.
கையினாலும் பொல்லுகளாலும் தனது முகத்திலும், தலையிலும், நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் அந்தக் குழு தாக்கியது என்று தாக்குதலுக்குள்ளான தொழில் நுட்ப உத்தியோகத்தர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ள மேற்படி தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மணல் கடத்தல் மாபியாக்கள் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள், பணியில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறினால் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.