மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு காலை வரை சிகிச்சையில்லாதது கண்டிக்கத்தக்கது- சட்டத்தரணி சுகாஷ் தெரிவிப்பு.
குருதிப் போக்கினால் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில், நள்ளிரவு நேரத்தில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு காலை வரை சிகிச்சையளிக்கப்படாமை கண்டிக்கத்தக்க விடயம் என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த 27 வயதேயான இளம் பட்டதாரிப் பெண்ணான மரியராஜ் சிந்துஜா, தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார். உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.
விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை.
இது தவறல்ல, குற்றம். நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும்.
இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும்.
எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.