பிரிட்டன்: ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் படுதோல்விக்கான காரணங்கள் - ஓர் அலசல்

6 months ago


பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி அரசியலின் 'மான்செஸ்டர் அணி' என்றே சொல்லலாம். பிரபல கால்பந்து அணியான 'மான்செஸ்டர்', பல வெற்றிகளைப் பெற்ற ஒரு அணி. இன்னும் சொல்லப் போனால், அந்த அணியின் முக்கிய வீரர்கள் சிலரால் வெற்றியைத் தவிர வேறு எதையும் நினைவில் கொள்ள முடியாது.

தொடர்ந்து நான்கு தேர்தல்களில் நான்கு பிரதமர்களை பிரிட்டனுக்கு அளித்துள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றிப் பயணம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பல கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்கள், இதற்கு முன் தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்தவர்கள், 2024 தேர்தல் முடிவுகளால் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் வழக்கமாக இப்படி அமைதியான முறையில் எதிர்வினையாற்றுபவர்கள் அல்ல என்று அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகிறார்.

அவர்களின் தேர்தல் உத்திகள் மற்றும் தலைமைத்துவத்தில் என்ன தவறு ஏற்பட்டது, அடுத்து கட்சியை எதை நோக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்கான திட்டப் பணிகள் இப்போது தொடங்குகிறது.

கன்சர்வேடிவ் கட்சியினருடன் பேசும்போது, ​​பல கருப்பொருள்கள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.

தொழிலாளர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகள் தங்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இல்லை என்று கன்சர்வேடிவ் கட்சியினர் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாடு என்பது இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டித் 'திறன்' பற்றியதாக இருந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஐந்து தலைவர்களையும், பிரதமர்களையும் பெற்றுள்ளனர்.

ப்ரெக்ஸிட், கொரோனா முதல் பல தலைமைப் போட்டிகள் வரை, பிரிட்டனை உலுக்கிய நிகழ்வுகள் பல கட்சியைக் கருத்தியல் ரீதியாகப் பிரித்தது. சில கன்சர்வேடிவ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பைக் காட்டிலும் ஒருவரையொருவர் வீழ்த்துவதற்கு அதிக ஆற்றலைச் செலவழித்தனர். உண்மையில் இவை பிரச்னைகளைச் சரிசெய்யவில்லை.

லாக்டவுன் பார்ட்டிகள் முதல் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்குப் பங்களித்த மினி-பட்ஜெட் வரை, கன்சர்வேடிவ் கட்சியைப் பல குற்றச்சாட்டுகள் உலுக்கின. அதோடு சேர்த்து இந்தத் தேர்தல் போட்டி என்பது கூடுதல் சிக்கலாக மாறியது.

நடத்தை தொடர்பான பிரச்னைகள் கட்சிக்குள் உள்ளதா என தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் தலைமைக் கொறடா சர் மார்க் ஸ்பென்சரிடம் கேட்டபோது, ​​மற்ற கட்சிகளும் மோசமான நடத்தைக்காக எம்.பி.க்களை இடைநீக்கம் செய்துள்ளன என்று குறிப்பிட்டார். இது உண்மைதான், ஆனால் இது மிகவும் வழக்கமானதாகி விட்டது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

அதுமட்டுமல்லாது மக்களிடம் மாற்றத்திற்கான ஒரு விருப்பம் இருந்தது, 'தொழிலாளர்' என்ற வார்த்தையும் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது.

உயரும் வாழ்க்கைச் செலவு, நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) காத்திருப்புப் பட்டியல்கள் மற்றும் சிறிய படகுகள் அனைத்தும் வாக்காளர்கள் சார்பில் எழுப்பப்பட்ட பிரச்னைகள். இவை மேலும் மோசமாகி வருவதாக நான் உணர்ந்தேன்.

சொல்லாட்சி மற்றும் கொள்கைகள் மூலம், மக்கள் செல்வாக்கை மீண்டும் வெல்வதற்கான கன்சர்வேடிவ் கட்சியின் முயற்சிகள் மேலும் சில மையவாத உறுப்பினர்களை அந்நியப்படுத்தியது. இதனால் அவர்கள் தொழிலாளர் கட்சி அல்லது லிபரல் டெமாக்ராட்டுகளுக்காக கட்சியைக் கைவிட்டனர். கன்சர்வேடிவ் உறுப்பினர்களுக்கு இருபக்கமும் பலவீனமாக அமைந்துவிட்டது.

ஜெரமி கார்பினின் தொழிற்கட்சிக்கு வாக்களிக்க முடியும் என்று நினைக்காத சில மையவாதிகளுக்கு இது மிகவும் வசதியான மாற்றமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளில் தோல்வி தவிர்க்க முடியாதது என்று கூற முடியுமா? நான் பேசிய பெரும்பாலான கன்சர்வேடிவ் கட்சியினர் தேர்தல் முடிவை 'எதிர்பாராதது' என்று விவரிக்கின்றனர். ஆனால் சிலர் அந்தத் தோல்வியின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

டி-டே நினைவு நிகழ்ச்சியில் இருந்து ரிஷி சூனக் முன்கூட்டியே வெளியேறியது போன்ற சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

போரிஸ் ஜான்சனும் இதுபோல சில சர்ச்சைகளுக்கு ஆளாகியிருந்தாலும், அவரைப் போல சூனக் அதே வழியில் வாக்காளர்களை வசீகரிக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் சிலர் கருதினர். சூனக் ஏன் ஜூலையில் தேர்தலை நடத்த முடிவு செய்தார் என்பது குறித்து இன்னும் சிலரிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

அவர்களின் பிரசார குரு, ஐசக் லெவிடோ, தேர்தலைத் தள்ளிவைக்க வாதிட்டார். கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகள் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நிரூபிக்க இன்னும் கால அவகாசம் கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் லெவிடோவின் வாதம் எடுபடவில்லை.

அதேநேரத்தில் லெவிடோவின் விமர்சகர்கள் வாதிட்டது என்னவென்றால், கன்சர்வேடிவ் கட்சியினருக்கு இன்னும் மோசமான செய்திகள் வரக்கூடும் என்று கூறினர். இந்தக் கோடையில் அதிகமானோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உள்ளே நுழைந்தது, சிறைச்சாலை நெரிசல் காரணமாக அதிகமான குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி, பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்படுவது ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் கொள்கை மற்றும் அடையாள ரீதியில், கன்சர்வேடிவ் கட்சியினர் வேறு என்ன செய்திருக்க முடியும்? அக்கட்சியின் இழந்த செல்வாக்கைத் தேடும் பணி தொடங்கும் வேளையில் அவர்களின் கவனம் அங்குதான் இருக்கும்.

கன்சர்வேடிவ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சூனக் உறுதி அளித்துள்ளார். அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடிந்த பிறகு, தாம் விலகிவிடுவதாகக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்து புதிய பிரதமரை முன்னாள் பிரதமர் கேள்வி கேட்பது போன்ற அவலநிலையைத் தவிர்க்க, இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படுகிறாரா என்பது குறித்துக் கடந்த சில வாரங்களாக கட்சியினரிடையே சில முணுமுணுப்புகள் உள்ளன.

இதற்கு முன்பு அமைச்சரவையில் பணியாற்றிய சர் ஆலிவர் டவுடன், ஜேம்ஸ் கிளவர்லி, அல்லது ஜெரமி ஹன்ட் போன்றவர்களில் ஒருவராக இருக்க முடியுமா?

அப்படியானால், அவர் முழுநேரத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்பாத ஒருவராக இருக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த தலைமைப் போட்டி முடியும் வரை சூனக் தலைவராகத் தொடரலாம்.

கட்சிக்கு வலதுசாரிகள் பக்கம் இருக்கும் கெமி படேனோச் (புக்கிகளுக்கு விருப்பமானவர்) மற்றும் மையமாக இருக்கும் டாம் துகென்தாட் உட்பட சில எம்.பி.க்கள் தங்கள் ஆதரவைத் திரட்ட நீண்ட காலமாகத் திரைக்குப் பின்னால் பணியாற்றி வருகின்றனர்.

சுயெல்லா பிரவேர்மேன் மற்றும் முன்பு சூனக்கின் நண்பராக இருந்து விமர்சகராக மாறிய ராபர்ட் ஜென்ரிக் போன்ற முன்னாள் போட்டியாளர்களும் இந்தத் தலைமைக்கான போட்டியில் உள்ளனர்.

அவர்கள் இருவரும் கட்சியின் உள்துறை அலுவலகத்தில் அதிக காலத்தைச் செலவிட்டவர்கள், கட்சியின் வலதுசாரிகள் பக்கம் உள்ளனர், மேலும் குடியேற்றம் குறித்த அரசாங்கத்தின் முடிவை விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், மீதமுள்ள கன்சர்வேடிவ் எம்.பி.க்கள் யார் பக்கம் என்பதும், தலைமைக்கான போட்டியில் அவர்களின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதுதான் இதிஇதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

கன்சர்வேடிவ் எம்.பி.க்களின் புதிய சேர்க்கை மற்றும் 2022 ஜூலை -செப்டம்பரில் நடந்த முதல் கன்சர்வேடிவ் தலைமைப் போட்டியில் அவர்கள் யாரை ஆதரித்தார்கள் என்பது குறித்தும் நான் விரைவாகச் சிந்தித்தேன்.

சுவாரஸ்யமாக, பெரும்பான்மையானவர்கள் சூனக்கின் ஆதரவாளர்கள். இதில் லிஸ் ட்ரஸ் ஆதரவாளர்களின் பெரும் பகுதியும் உள்ளது. சுயெல்லா பிரவேர்மேன் மற்றும் கெமி படேனோச் ஆகியோர் நாடாளுமன்றக் கட்சியின் வலதுபுறத்தில் அவர்களது முக்கியக் கூட்டாளிகளை இழந்துள்ளனர். துகெந்தட்டின் ஆதரவாளர்களில் சிலர்கூட போய்விட்டனர்.

மீதமுள்ள எம்.பி.க்களின் சார்பு ஏன் முக்கியமானது? சரி, ஓரளவுக்கு இது கன்சர்வேடிவ் கட்சி எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்.

இப்போது பல இடங்களை வென்றுள்ள சீர்திருத்தக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க, படேனோச், பிரவேர்மேன் அல்லது ஜென்ரிக் போன்ற வலதுசாரி நிலைப்பாடு கொண்ட ஒருவரை கட்சி தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறதா?

கட்சியில் உள்ள சிலர், குடியேற்றம் போன்ற பிரச்னைகளில் கன்சர்வேடிவ் தரப்பு கடுமையாக இருக்கவில்லை என்பது அவர்களின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று கருதுகிறார்கள்.

அதேபோல கன்சர்வேடிவ் கட்சியினரின் வலதுசாரி சார்பும் பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. சமூக ரீதியில் தாராளவாதக் கொள்கையும், ஆனால் நிதி ரீதியாக கன்சர்வேடிவ் கட்சியையும் ஆதரிக்கும் வாக்காளர்களை அந்நியப்படுத்தியதும் ஒரு காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

வரும் வாரங்களில் நடைபெறவிருக்கும் அதிகமான சச்சரவுகள், கட்சியின் ஆன்மாவுக்கான தேடல் மற்றும் இழந்த செல்வாக்கை மீட்பதற்கான முயற்சிகளின் விளைவாக சில பதில்கள் கிடைக்கலாம்.

அண்மைய பதிவுகள்