மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்துமாறு வன்னி எம்.பி துரைராசா ரவிகரனிடம் வீகேன் அமைப்பு வலியுறுத்து.

2 months ago



மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் வீகேன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு வலியுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அடம்பன், வேட்டையாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வீ கேன் மாற்றுத் திறனாளிகள் வளாகத்துக்கு நேரடியாகச் சென்று மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 2,123 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அதில் 98 செவிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகளும், 309 சிறார் மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர்.

அத்தோடு மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவில் மொத்தம் 414 மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர்.

அதில் 16 பேர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 64 சிறார் மாற்றுத் திறனாளிகளும் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள மாற்றுத் திறனாளிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ்களில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தும் மாற்றுத் திறனாளிகள் அதில் அமர்ந்து பயணிக்க இடமளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் போதுமான வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதேவேளை, பொது இடங்களில் குறிப்பாக அரச திணைக்களங்களில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகு வசதிகள் இல்லை.

செவிப்புலன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழிபெயர்ப்பாளர் இல்லை.

குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடசாலை வவுச்சர் திட்டத்தினுள் விசேட கல்வி மாணவர்களை உள்வாங்குதல், பாடசாலைகளில் உள்ள விசேட கல்வி மாணவர்கள் ஒவ்வொருவரதும் இயல்புக்கு ஏற்ப, அவர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைக் கற்றல் செயற்படுகளுக்கான பொருள்கள் வழங்கப்படுதல், ஒவ்வொரு விசேட கல்வி அலகுக்கும் ஆசிரியர் ஒருவருடன் பராமரிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுதல், வங்கிகளில் விசேட தேவையுடைய சிறார்களுக்கு விசேட சேமிப்புக் கணக்குகளைக் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதன்போது விசேட தேவையுடைய மாணவர்களின் முக்கிய தேவைகள் அடங்கிய மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும், தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப் பட்டது.