தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பியைகொண்டாடுகின்ற நிலைமை.-- கஜேந்திரன் தெரிவிப்பு
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்களப் பேரின வாதக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தேர்தல் விதி முறையை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு வாக்கு மூலங்களைப் பெற்றதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கைது தொடர்பில் ஊடகங்களுக்குக் கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவமானது தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல் நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
வடக்கு - கிழக்கைப் பொறுத்த வரையில் ஜே.வி.பியினுடைய சிந்தனையிலும், பொலிஸ் திணைக்களங்களினுடைய சிந்தனையிலும் எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை இந்தக் கைது எடுத்துக் காட்டுகின்றது.
கடந்த அரசுகள் மேற்கொண்டதைப் போல் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையையும், இனவாதத்தையும்தான் ஜே.வி.பியினரும் பின்பற்றப் போகின்றார்கள் என்பதற்கு இந்தக் கைது சாட்சியாக அமைகின்றது.
ஜே.வி.பி. அரசைக் கொண்டாடக் கூடிய தமிழர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
நீங்கள் உங்களுடைய தலையிலே மண்ணை அள்ளிப் போடுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றீர்கள்.
ஜே.வி.பினுடைய இனவாத சிந்தனையிலே எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
புதிய வாக்காளர்கள் இளையோர் தென்னிலங்கையில் இடம்பெறும் போலித்தனமான பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது.
தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும்.
அதுபோல் அனைத்து சிங்கள பேரினவாதக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.
அதுவே தமிழ் மக்கள் கொடுக்கின்ற சாட்டை அடியாக இருக்கும்."- என்றார்