தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம். என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்க ளிடம் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை அரசு தமிழக மீனவர்களை தண்டனை கைதிகளாக மாற்றி, பெரும் தொகைகளை அபராதமாக விதித்து கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் மீனவர்களுக்கு மொட்டை அடித்து தன்மானத்தை பறிக்கும் செயலை செய்துள்ளது. இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறிய செயல்களை கண்டிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தாங்கள் தான் உலகத்துக்கே சமாதானத்தை கொண்டு வருவதாக பேசி வருகிறார்.
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு சமாதானம் செய்ய தொடர்ந்து இருநாட்டுக்கும் பயணம் செய்யும் மோடி இலங்கை அரசை கட்டுப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாதா? பாதிக்கப்பட்ட மீனவர்க ளுக்கு தமிழக அரசு தொடர்ந்து நிவாரண தொகை வழங்கி வருகிறது.
ஆனால் மத்திய அரசு இதுவரை சல்லிக்காசு கூட கொடுக்கவில்லை.
தமிழக முதல்வர் மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் காதுகேளாத அரசாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி இருக்கிறது.
மத்திய அரசு மீனவர்களை பிரச்சினைகளை தீர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம். - என்றார்.