அரச ஆதரவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருடும் வங்கிகள் மறைக்கப்படும் அதிர்ச்சித் தகவல்.

4 months ago


அரச ஆதரவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருடும் வங்கிகள் மறைக்கப்படும் அதிர்ச்சித் தகவல்.

அதிகமான அரச ஊழியர்களின் சம்பளப் பணத்தில் முக்கால் பங்கிற்கும் மேற்பட்ட பணத்தை வங்கிகள் கழித்தெடுத்துவிட்டு கால்ப் பங்கிற்கும் குறைவான சம்பளப் பணத்தையே அரச ஊழியர்களிடம் வழங்குவதாகவும் இதற்கு அரசு அங்கிகாரம் வழகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செயலானது அரச ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கான சம்பளத்தை அரசு ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்தெடுக்கும் வாழ்வுரிமையை மீறும் மிகவும் கீழ்த்தரமான மோசமான செயலாகவே நோக்கப்படுகின்றது.

இலங்கையில் அரச நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் வங்கிகள் ஊடாகவே சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. அதனைப் பயன்படுத்தி அரச ஊழியர்களுக்கான வங்கிக் கடன்களை ஆரம்பத்தில் குறைந்த வட்டியில் நிறைந்த கடன் என வழங்கும் வங்கிகள் பின்னர் வட்டி வீதத்தை அதிகரித்து அவர்களது சம்பளத்தில் பெரும் பங்கை மாதாந்தம் கழித்தெடுத்து வருவதாகவும் இதனால் குடும்பச் செலவுகளைச் செய்யமுடியாது பல அரச ஊழியர்கள் பெரும் துன்பப்படுவதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்தம் 47000 ரூபாய் சம்பளப் பணமாகப் பெறவேண்டிய வங்கிக் கடன் பெற்ற அரச ஊழியர் ஒருவர் வங்கிக் கடனாக 30820 ரூபாவை வங்கி கழித்தெடுத்ததன் பின்னர் வெறும் 16180 ரூபாவை மாத்திரமே சம்பளமாகப் பெற்று மாதாந்தக் குடும்பச் செலவுகளைச் செய்யவேண்டியவராகக் காணப்படுகின்றார்.

குறைந்த வட்டியில் நிறைந்த கடன் மாதாந்தம் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 8.5 வீதத்தில் வங்கிக் கடன் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்த அரச ஊழியர்கள் தமது அவசர தேவையின் நிமித்தம் குறித்த வங்கியை அணுகிய வேளை குறைந்த வட்டியில் அதிக கடன் வழங்குவதாகக் கூறி கடன் வழங்கப்படும்போது உங்கள் அவசர தேவையைக் கருத்திற்கொண்டு இலகுவாகவும் மிக விரைவாகவும் நீங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வேறொரு திட்டத்தினூடாக சிறிதளவுதான் வட்டி வீதம்தான் கூட 12 வீதம்தான் அதனூடாக இக்கடன் தொகை உங்கள் கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போதே உங்களுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பித்த பதினைந்து இலட்சத்தில் (1500000) வெறும் பன்னிரண்டாயிரம் மாத்திரம் (12000) காகிதாதிகள் நிர்வாகச் செலவாகக் கழிக்கப்பட்டுள்ளது. மிகுதி உங்கள் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. உங்கள் வயதைக் கருத்திற்கொண்டு 10 வருடத்திற்கு (120 மாதங்கள்) கடன் கட்ட வேண்டிய காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 47000 ரூபாய் சம்பளம் பெறும் மேற்படி அரச ஊழியரின் சம்பளப் பணத்திலிருந்து கடன் மீளளிப்புத் தொகையாக 24700 ரூபாவும் கட்டாய சேமிப்பாக 2000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 26700 ரூபாவை வங்கி கழித்தெடுத்ததன் பின்னர் மீதியாக 20300 பெறக்கூடியதாக இருந்து வந்த நிலையில் ஒரு வருடம் சென்ற பின்னர் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தலுக்கமைவாக வட்டி வீதம் அதிகரிப்பு எனும் நிபந்தனைக்கமைவாக வங்கிக் கடன் பெற்றவர்களின் வட்டி வீதத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனும் கூற்றுடன் 4120 ரூபாய் அதிகரிக்கப்பட்டு கட்டாய சேமிப்புடன் மாதாந்தம் 30820 ரூபாய் பணத்தை வங்கி கழித்தெடுத்தால் மிகுதியாக வெறும் 16180 (பதினாறாயிரத்து நூற்றியெண்பது) மட்டுமே மேற்படி அரச ஊழியருக்கு மாதாந்தச் சம்பளமாகக் கிடைக்கும்.

அரச ஊழியரின் சம்பளத்திலிருந்து வங்கி பெறும் தொகை: 

முதல் ஒரு வருடத்திற்கும் (12 மாதத்திற்கும்) 24700X12 = 296400

அடுத்த 9 வருடத்திற்கும் (108 மாதத்திற்கும்) 28820X108 = 3112560

மொத்தம்: 3112560 + 296400 = 3408960

கொள்ளை இலாபம்: 3408960 – 1500000 = 1908960

பதினைந்து இலட்சம் (1500000) ரூபாய் வங்கிக் கடன் பெற்ற மேற்படி அரச ஊழியர் வங்கிக்கு பத்தொன்பது இலட்சத்து எண்ணாயிரத்து தொள்ளாயிரத்து அறுபது (1908960) ரூபாய்களை மேலதிகமாகச் செலுத்துகின்றார். இப்படியாகப் பல அரச ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

அரச ஊழியர் ஒருவரது அடிப்படைச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்டளவு தொகையையே வங்கிகள் கடன் மீளளிப்பாகக் கழித்தெடுக்க முடியும் எனும் நிபந்தனையையும் மீறி சம்பளப் பணத்தின் பெரும் தொகையை கழித்தெடுத்த பின்னரே சிறிதளவு தொகையை ஊழியர்கள் பெற இடமளிப்பதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

பெருமளவு கடன் தொகையை அறவிட்டுக் கொள்ளை இலாபமீட்டும் வங்கியிலிருந்து குறித்த அரச ஊழியர் வேறு வங்கிக்கு தமது கொள்ளை இலாபமீட்டும் வங்கியிலிருந்து குறித்த அரச ஊழியர் வேறு வங்கிக்கு தமது சம்பளத்தை மாற்ற முடியாத கண்டிப்பான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள பலர் வெளியில் கூறமுடியாத நிலையில் துன்பப்பட்டு வருவதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசு கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடன் மீளமைப்புச் செய்த ஆட்சியாளர்களான அரசியல்வாதிகள் எவருமே அரச ஊழியர்கள் வங்கிகளால் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றி கவனமெடுக்காது பொறுப்பற்றுக் கண்மூடி வருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் வங்கிக் கடன் பெற்ற அரச ஊழியர்களின் சம்பளப் பணத்தில் பெருமளவு தொகையை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் கழித்தெடுப்பதானது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது.

மேற்படி இச்செயற்பாடானது இலங்கையில் அரச அங்கீகாரத்துடனேயே இடம்பெற்று வருகின்றது.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் அரச ஊழியர்களின் வாக்கைப் பெறுவதற்காக அரச ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைள் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துப் பிரசாரம் செய்து பெருந்தொகை பணத்தைச் செலவு செய்யும் அரசும் அரசியல்வாதிகளும் இப்படி தமது ஊழியர்களின் உழைப்புக்கான ஊதியத்தை வங்கிகளுக்கு வழங்கி அதனை வங்கிகள் கொள்ளையிடுவதற்குத் துணை நிற்பவர்களாகவே கருதப்படுகின்றார்கள்.

மனித நாகரீகமடைவதற்கு முற்பட்ட காலம், காலணித்துவ ஆட்சிக் காலம் போன்ற காலப் பகுதிகளில் பிற நாடுகளைக் கைப்பற்றிய அந்நியர்கள் மக்களை அடிமைகளாக்கி வேலை வாங்கி குறைவான ஊதியத்தை வழங்கி அதனையும் பிறிதொரு நபர் மூலம் பறித்தெடுக்கும் நிலை காணப்பட்டது. மனித நாகரீகம் வளர்சியடைந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் இக்கால கட்டத்தில் இலங்கையில் தனது சொந்த நாட்டு மக்களையே அதிலும் தனது ஊழியர்களான அரச ஊழியர்களின் உழைப்புக்கான ஊதியத்தை அரசு ஒருகையால் வழங்கி மறுகையால் வங்கிகள் மூலமாக பிடுங்கி எடுத்து அவர்களது வாழ்வுரிமையையே மறுக்கும் மிகவும் மோசமான நாடாக இலங்கை காணப்படுகின்றது.