பாரம்பரிய முறையில் கொடியேற்றத்துடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகா உற்சவம் ஆரம்பமானது.
குறித்த ஆலயத்தில் முதல் முறையாக பாரம்பரிய முறையில் கொடிச்சீலை எடுத்து வரும் வைபவம் இன்று (10) நடைபெற்றது.
தமிழர்களது பாரம்பரியத்தில் விவசாயம் மிகவும் முக்கியமானது.அந்த வகையில் இயந்திரங்களுக்கு முன்னர் எருதுகள் பயன்படுத்தப்பட்டது.
அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் எருது பூட்டி கந்தசாமி கோவில் வருடாந்த உற்சவத்திற்கான கொடிச்சீலை பிள்ளையார் கோவிலிலிருந்து எடுத்த வரப்பட்டதோடு இந்த முறையானது வருடம் தோறும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அடுத்ததாக இந்த ஆலயத்தில் முதல் முதலாக இதனைச் செய்துள்ளோம் என விழாவில் கலந்து கொண்ட குருக்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வருடாந்த மகா உற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டது.
பக்தர்கள் புடைசூழ மிக பிரமாண்டமாக இடம்பெறும் வருடாந்த உற்சவத் திருவிழா 10 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 18ம் திகதி தேர்த் திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.