யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை.

3 months ago


யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும் என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டினால் வெளியிடப்பட்டுள்ள நில அபகரிப்பு தொடர்பான புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அனுராதா மிட்டால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தரவுகளையும், ஆவணப்படுத்தல்களையும் உள்ளடக்கிய 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை: இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்கு வைக்கும் நில அபகரிப்பு' எனும் தலைப்பிலான 32 பக்க ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து இக் குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும்  இராணுவத்தினரால் கையாளப்பட்டு வரும் பலதரப்பட்ட உத்திகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

'யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும்' என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், நில அபகரிப்புக்களின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தைத் தம்வசம் வைத்திருக்கின்றனர்.

அங்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், சக்தி வலு உற்பத்தி, சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடங்கலாக 'அபிவிருத்தி' எனும் போர்வையில், 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்கள் இந்த நில அபகரிப்பின் மூலம் இடம்பெறும் 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை' என்ற ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

'தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும், குடித்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வாய்ப்பேற்படுத்துகின்றது.

2009 ஆம் ஆண்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வட, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருப்பதன் மூலம் இம்மாகாணங்கள் தொடர்ந்து உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன.

இது அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கும், நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது' எனவும் த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது.





அண்மைய பதிவுகள்