தென்னை ஆராய்ச்சி சபையின் ஓர் அலகை வடக்கு மாகாணத்தில் நிறுவ வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.




தென்னை ஆராய்ச்சி சபையின் ஓர் அலகை வடக்கு மாகாணத்தில் நிறுவ வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொது முகாமையாளர் விஜயசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, கருத்துத் தெரிவித்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர், "தென்னை பயிர்ச் செய்கை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.
தற்போது வெள்ளை ஈ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.
இதேவேளை, இந்த ஆண்டு ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை நடுகை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்குரிய ஒத்துழைப்புக்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய தென்னங்கன்றுகளை நடுகை செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், சில இடங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்தால் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் சிக்கல் நிலைமை இருக்கின்றது எனவும் தெளிவுபடுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச் செய்கைக்கு உரங்கள் பயன்படுத்துவது குறைவு எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், இங்கு தென்னை ஆராய்ச்சி சபையின் ஓர் அலகினை நிறுவ வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று கலப்பு இன தென்னங்கன்றுகளை இங்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அனுமதிக்கப்பட்ட சில வகையான உரங்களைப் பயன்படுத்துவதன் ஊடாகவே தென்னை மரங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதுடன் கூடியளவான உற்பத்தியையும் பெற்றுக் கொள்ள முடியும் என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் உரங்களை மானிய விலையில் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவி பொது முகாமையாளர் தே.வைகுந்தன், வெள்ளை ஈ தாக்கத்தை பொறிமுறை ரீதியாக கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்கள் தென்னை பயிர்ச் செய்கை வசம் உள்ள போதும், ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் தரப்பினரின் உதவிகளைப் பெற்று வழங்கினால் பரவலாக இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
