பால்சார் உற்பத்தியில் வடக்கு தன்னிறைவு காண, பால் உற்பத்தி மையங்களை கூட்டுறவினூடாக உருவாக்க வேண்டும்.-- கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவிப்பு

3 days ago



பால்சார் உற்பத்தியில் வடக்கு மாகாணம் தன்னிறைவு காண்பதற்கு சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்களை கூட்டுறவுத் துறையினூடாக வடக்கில் உருவாக்க வேண்டும் என்று வடக்குக் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பாளர்கள். விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமியப் பொருளாதாரத்தை தனியே கால்நடை வளர்ப்புத்துறை, விவசாயத்துறை, பனை தென்னை வள அபிவிருத்தி என பிரித்துப் பார்க்க முடியாது என்றும் எல்லாத் துறையையும் சேர்த்துத் தான் கிராமிய அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

வடக்கு மாகாண மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவான பால் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஆனால் தரமான பால் உற்பத்தித் திறன் மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி மையங்கள் இல்லாமையினால் பெருமளவு பாலானது தென்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது.

வடபகுதியில் தனியார் நிறுவனங்களினால் 160 தொடக்கம் 170 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்ட பெட்டிப்பாலாக 580 ரூபாவுக்கு நவீன அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தச் செயற்பாட்டினால் நாம் பெரும் இழப்பைச் சந்திக்கின்றோம்.

எனவே, சிறந்த திட்டமிடல்களினூடாகப் பால் உற்பத்தியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வடமாகாணத்தின் பால் இறைமையைக கைப்பற்ற முடியும் - என்றார்.

அண்மைய பதிவுகள்