தமிழர் விடயத்தில் தொடர்ந்து பயணிப்பேன் - ஜெய்சங்கர் தெரிவிப்பு

9 months ago

தமிழர் விடயத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று ஒரேமேசையில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா சாணக்கியன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் லேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பில் கொழும்பு இந்தியத் தூதரக அதிகாரிகளும் உடனிருந்தனர்.

சுமார் அரை மணித்தியாலம் வரை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் கலந்துரையாடப்பட்டபோது இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துகள் காணப்படுவதாகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

தாம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரியப்படுத்தினார்.

கலந்துரையாடலின் நிறைவில் இலங்கைத்தீவில் தமிழருடைய தேசத்தையும், அதன் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை அடைந்துகொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனால் எழுத்து மூலமான கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்