பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு - கிழக்கில் தனித்துப் போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு - கிழக்கில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயல்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சி யின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அந்தக் கட்சியின் செயலாளர் எ. இ. இராசநாயகம் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்தவை வருமாறு,
தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையை தெரிவு செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையை தக்கவைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.
இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.
பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் ஓர் அணியாகத் திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்”- என்றார்.
இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் துஷ்யந்தன், கட்சியின் முக்கியத்தர்கள் கலந்து கொண் டனர்.