இலங்கையில் அதிக வாடகை செலுத்தி தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை, அரச கட்டடங்களுக்குள் மாற்ற தீர்மானம்
அதிக வாடகை செலுத்தி பல்வேறு தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை, அரசுக்கு சொந்தமான கட்டடங்களுக்குள் மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை 50 இலட்சம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இடைக்கால நியமக் கணக்கு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைக் கூட சேமித்து வருவதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.