தமிழ் மக்களுக்கு எதிராக அரச அதிகாரிகள்

6 months ago

இன்றைய காலம் தமிழ் மக்களுக்கு எதிராக அரச அதிகாரிகள் நிற்பது கவலை தரும் விடயமாகும். மக்கள் தமது தேவை கருதி அரச அலுவலகம் சென்றால் ஏன் வருகுதுகள், இதுகளால பெரிய பிரச்சினை என்று சினக்கும் அரச அலுவலகங்கள் உண்டு.

ஒரு காலம் அரச அதிகாரிகள் தமிழ் மக்களுக்காக நின்றார்கள். அவர்களின் பிரச்சினையில் பங்கெடுத்தார்கள். பங்கெடுத்ததால் அவர்களுக்கு தென்னிலங்கை அரச திணைக்கள மேலிடத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிறசருக்கு முகம் கொடுத்தார்கள். இன்று அப்படியான அரச அலுவலகங்களை காணவில்லை.

சந்ததி சந்ததியாக வாழ்ந்து வந்த வன்னி மாவட்டத்தில் வாழ்பவர்கள் தமது கணக்கு பொமிட் பத்திரத்தை பதிவாக வைத்திருக்கிறார்கள். இதனால் தான் என்னவோ அரச திணைக்களங்கள் இலகுவாக அவர்களின் காணிகளை அபகரிக்கின்றன.

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான அரச அதிகாரிகளின் வன்முறைகள் தொடர்கின்றன என்று அமெரிக்காவின் 2023 ஆம் ஆண்டுக்கான மதச் சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக அரச அதிகாரிகளின் வன்முறைகள் தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் அளவுக்கு அரச அதிகாரிகள் செயற்படுவது. தமது உழைப்புக்காகவா? அல்லது அரசாங்கத்தின் விசுவாசத்துக்கா? என்பது புரியாத பதிலாக உள்ளது.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு அரசாங்கம், அரச அதிகாரிகள் வழியாகக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.

தையிட்டியில் அனுமதியின்றிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதை மூடி மறைத்த அரச அதிகாரியின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விடயம் தொடர்பில் அரசு அரச அதிகாரி மூலம் இந்த செயற்பாட்டைச் செய்துள்ளது. 

தனியார் காணிகளில் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகள் காரணமாக இருப்பது வெட்கக் கேடான செயற்பாடு ஆகும். இந்த விடயங்களில் அரச அதிகாரிகள் மக்களுக்காக செயற்பட வேண்டும் ஆனால் அவர்கள் அரசுக்காக செயற்படுகிறார்கள். பிறகு எப்படி இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை எடுக்கப் போகிறார்கள்.

குறித்த சட்டவிரோத விகாரையைச் சுற்றியுள்ள பகுதியில் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு 12 ஏக்கர் நிலமிருப்பதாகவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் இராணுவம் அந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இந்தச் சட்டத்தை சிறுபான்மை இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைப்பதற்குப் பயன்படுத்துகின்றது என்றும் அமெரிக்காவின் 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் மத சுதந்திரத்தை பாதுகாக்க தீவிரம் காட்டுகின்றனர். ஆனால் இங்கே தான் மத சுதந்திரம் என்று தனியார் காணிகளில் விகாரைகளை அமைக்கிறார்கள். வடக்கில் விகாரைகள் இல்லாத இடமெல்லாம் விகாரைகள் முளைத்துள்ளன.

இதே போல் தான் இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்கள் பெரும் பிரச்சினையை எதிர் கொண்டு வருகின்றனர். டில்லி அரசால் அரச அதிகாரிகளை தூண்டி விட்டு அடக்கு முறைகளை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு சிறுபான்மை இன மக்கள் என்ன செய்கின்றார்கள் என்று விசாரணை செய்கின்றார்களே ஒழிய அந்த மக்கள் பற்றி அக்கறை கொள்வதில்லை.


அண்மைய பதிவுகள்