கஜேந்திரகுமார் ஆதரித்திருந்தால் அதையும் ஏற்று ஆட்சி செய்திருப்பேன்! ரணில் தெரிவிப்பு

6 months ago


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனக்கு ஆதரவு வழங்கியி ருந்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு நாட்டை ஆட்சி செய்திருப்பேன். நான் ராஜ பக்ஷக்களின் நண்பன் அல்ல இவ்வாறு கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து என்ன செய்கின்றீர்கள் எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 70 முதல் தாமும் மகிந்தவும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள். எப்போதும் எதிரிகளாகவே இருந்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேருணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் நிறைவை முன்னிட்டு நடந்த நிகழ்விலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், நாட்டின் நெருக்கடியான நிலைமைகளில் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால், நாட்டை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டுமென மகிந்த தமக்கு அறிவுரை கூறியதில்லை.

அரசாங்கம் கவிழும்போது மரபு ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச காணாமல் போய்விட்டார். பொறுப்பை ஏற்காது ஒளிந்து விட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் ஜன நாயக ரீதியான பொறுப்பை அவர் தட்டிக் கழித்துள்ளார். எனது நண்பர் அனுரகுமார திஸநாயக்க இந்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது.

உலகில் எந்தவொரு நாட்டிலும் நடக்காத விடயம் இலங்கையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள எவரும் இருக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் யாசகம் செய்தது.

நானாக இந்தப் பதவியை கேட்க வில்லை. உண்மையில் சஜித் பதவியை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் அவருக்கு உதவியிருப்பேன். நாடு ஒன்று நெருக்கடியில் விழும்போது பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமானது.

எவ்வளவு அடித்துக் கொண்டாலும் மாலை வேளைகளில் சந்திப்போம் - பேசுவோம். திருமண நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளோம். மொட்டு கட்சி மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு நாட்டை ஆட்சி செய்திருப்பேன்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்னால் முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் அதன் காரணமாகவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். மொட்டு கட்சியின் ஆதரவை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 450 ரூபாய்க்கு மேல் சென்றிருக்கும் - என்றார்.


அண்மைய பதிவுகள்