இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை
கடந்த அரசாங்கத்தின் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
முற்றிலும் சட்டவிரோதமான முறையில் இந்த மின் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டி 'எபிக் லங்கா' தனியார் நிறுவனம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒக்ரோபர் முதலாம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமது லஃபர் தாஹிர், உண்மைகளை பரிசீலித்து, அரசாங்கத்தின் முறையான கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் சட்டத்திற்கு முரணான வகையில் இந்த மின் கடவுச்சீட்டு கையிருப்பை வாங்க முடிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
'எபிக் லங்கா' பிரைவட் லிமிடெட் தாக்கல் செய்த இந்த ரிட் மனுவில், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
50 இலட்சம் மின் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான கேள்விகோரல் நடைமுறையை மீறி செப்ரெம்பர் 2 ஆம் திகதி இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அதன் ஒரு பகுதியாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் மின் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, உரிய அமைச்சரவை தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அன்றைய தினம் மனுவை மீளப்பெறவும் உத்தரவிட்டார்.
மனுதாரர் நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரயா வாதாடினார்.