2024 ஆம் ஆண்டுக்கான விதைபந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் அக்கராயனில் ஒதுக்கப்பட்ட காட்டினுள் விதைபந்துகள் வீசப்பட்டன.
ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதன்போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைபந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் வீசப்பட்டன.
இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும் இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வடமாகாண பிரதிநிதியுமான ம. சசிகரன், ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு.தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரி, திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் இணைந்து கொண்டனர்.