கோத்தபாய ராஜபக்ஷவினால் மேற்கொண்ட படுகொலைகளை வெளியிட்டவர்கள் வழக்கில் இருந்து விடுவிப்பு.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்கள் வழக்கில் இருந்து விடுவிப்பு.
வெள்ளை வான்" குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தல் அண்மித்த காலப் பகுதியில் வெள்ளை வான் கடத்தல் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பை நடத்தி, தகவல்களை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை அவ்வழக்கில் இருந்தது விடுவித்து விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(29) தீர்ப்பளித்தது.
அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை விசாரிக்கமாலேயே நீதிபதி சுஜீவ நிசங்க இந்தத் தீர்ப்பினை அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திம்பிரிகஸ்யாய பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அன்டனி டக்ளஸ் பெர்னாண்டோ எனும் பெயரில் பிரசன்னமாகியிருந்த எஸ்.ஏ.சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர் பொய்யான விடயங்களை கூறியமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் போது சந்தேக நபர்களாக, குறித்த ஊடக சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட எஸ்.ஏ.சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர், அரச சாட்சியாக மாற்றப்பட்டு மேல் நீதிமன்ற வழக்கில் பிரதான சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டத.
2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கும் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை நிரூபிக்க அரச தரப்பால் 21 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டமையுடன், 5 சான்றுப் பொருள்கள் தொடர்பிலும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதிவாதிகளுக்காக கெளரி சங்கரி சட்ட நிறுவனத்தின் அனுசரணையில், சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா. ஓஷதி ஹப்பு ஆரச்சி ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா முன்னிலையானார்.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி பத்மால் முன்னிலையானார்.
வழக்குத் தொடுநரான சட்ட மா அதிபர் தரப்பானது கடந்த தவணையில் தமது தரப்பு சாட்சிய நெறிப்படுத்தலை முடித்துக் கொண்டிருந்ததது.
இந்த் நிலையிலேயே நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பிரதிவாதி தரப்பு தமது சார்பில் சாட்சியாளர்களை அழைக்காது முறைப்பாட்டாளர் தரப்பு முன்வைத்த சாட்சியங்கள் ஊடாக குற்றப் பத்திரிகையில் முன் வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களில் எதனையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என வாதிட்டது.
அதனால் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவையின் 200 ஆவது அத்தியாயத்துக்கு அமைய பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை கோராது பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அத்தரப்பில் கோரப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜீவ நிசங்க, வழக்குத் தொடுநர் தரப்பு வழக்கை நிரூபிக்கவில்லை எனக் கூறி ராஜித்த சேனாரத்ன மற்றும் மொஹம்மட் ரூமி ஆகியோரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகள் இருவரும் தலா 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.
அவர்களது வெலிநாட்டுப் பயணங்களைத் தடை செய்து 2020 ஆகஸ்ட் 28 இல் உத்தரவிட்டிருந்த்தது.
தற்போது இருவரும் முற்றாக வழக்கில் இருந்தது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனூடாக அவர்களது வெளிநாட்டு பயணத் தடை உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் நீங்கியுள்ளன.