யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக் காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் 8 படகுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழிலான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர்.
கட்டைக்காட்டில் இருந்து நேற்று ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்த வேளை 8 படகுகளுடன் குறித்த 16 பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரை கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளனர் என்று நேரில் பார்த்த தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியதுடன் விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத மீன்பிடிக்குச் சென்றுள்ளனர் எனவும், அவர்கள் இலஞ்சம் கொடுத்து தொழில் புரிகின்றனர் என்றும் தெரிவித்தனர்.