டொனால்ட் டிரம்பை சுட்டவர் உள ரீதியாக பாதிக்கப்படவில்லை - எவ்.பி.ஐ தெரிவிப்பு.

5 months ago


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட தோமஸ் மத்தியுஸ் குரூக்ஸ் உளரீதியாக பாதிக்கப்படாதவர் என எவ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் உளரீதியான பாதிப்பிற்குள்ளானவர் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள எவ்.பி.ஐ அதிகாரியொருவர் அவரது நோக்கம் குறித்தே கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக சமூக ஊடகங்களில் அவரது பதிவுகளை ஆராய்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆபத்தான அச்சுறுத்தலான விடயங்கள் எதனையும் காணமுடியவில்லை விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் அவரது கையடக்க தொலைபேசியை ஆராய்கின்றோம் அதனை எவ்பிஐயின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு கொள்கை ரீதியான காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை,அவர் தனித்து செயற்பட்டுள்ளார் போல தோன்றுவதாகவும் எவ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அவர் கடந்த காலங்களில் எங்களின் கண்காணிப்புகளின் கீழ் இருக்கவில்லை எங்கள் தரவுகளில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் எவ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என விசாரணைகளை மேற்கொண்டவேளை அவர் தனது தந்தை கொள்வனவு செய்த துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக எவ்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருடைய வாகனத்தில் சில வெடிபொருட்கள் காணப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்