திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விவசாயிகளால் தொல்லியல் துறையினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (01) குச்சவெளி பழைய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.
1962 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 வரையான காலப் பகுதிகள் வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மிகப்பெரிய நெற்களஞ்சிய சாலையாக விளங்கிய இடத்தில் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப் பகுதியில் குச்சவெளி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக இயங்கி வந்தது.
கடந்த ஆண்டு குச்சவெளி பொலிஸ் நிலையம் அவ்விடத்தில் இருந்து இடம்மாற்றம் செய்யப்பட்டது.
அடுத்து குறித்த இடம் மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக இயக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினரால் அவ்விடம் தொல்லியல் திணைக்களத்துக்கு உரிய இடம் என்று பதாதை வைக்கப்பட்டு தொல்லியல் துறை வசமானது.
இந்த இடமானது மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய இடமாக விளங்குவதோடு இந்து சமய கோயில், முஸ்லிம் பள்ளிவாசல், சிங்கள விகாரை போன்றன குறித்த இடத்தில் மிக அருகில் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகததுக்கு உட்பட்ட அனேகமான காணிகள் தொல்லியல் துறையினரால் அடாவடியான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி குச்சவெளி பிரதேச விவசாயிகள் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வைப் பெற்று அந்தக் காணியை மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக பயன்படுத்துவதற்கு அனுமதி தருமாறு கோரி குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.