பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்.
இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயிற்சி பெற்ற இந்திய மருத்துவரின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைக் குறிக்கும் காயங்களும் அவரது உடல் முழுவதும் காணப்பட்டதால், இது கூட்டுப் பலாத்காரம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
31 வயதான பெண் மருத்துவர் பணியில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடந்த வார தொடக்கத்தில் இருந்து இந்தியாவை உலுக்கியது, மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் எதிர்ப்பை தொடங்கியுள்ளனர்.
கொல்லப்பட்ட மருத்துவர் 36 மணித்தியாலங்கள் நீண்ட ஷிப்டில் ஈடுபட்டிருந்தார்.
மேலும், மருத்துவமனைகளில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை மற்றும் கூடுதல் நேரப் பணியிடங்கள் தொடர்பான எதிர்ப்புக்களுக்கு உட்பட்டிருந்தார்.
இதை மேலும் தீவிரமாக்கும் வகையில், சுமார் ஒரு மில்லியன் இந்திய மருத்துவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை விட்டுவிட்டு தேசிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகளில் அவசர நோயாளர்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பெண்கள் குழுவொன்று உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பிரதான சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் மோசமான வரலாறு உள்ளதுடன், 2012 ஆம் ஆண்டில், 22 வயதான ஜோதி சிங் டெல்லியில் ஒரு பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவர் இறப்பதற்கு முன்பு சந்தேக நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இந்த சம்பவம் ‘நிர்பயா சம்பவம்’ என்று பெயர் பெற்றது.