யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்து சென்றவரை வாள் கொண்டு துரத்தியவர் கைது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்து விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
இராசாவின் தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் 24 வயதான சந்தேக நபர் பதுங்கியிருந்தபோது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு மூவர் துரத்திச் சென்றுள்ளனர்.
இதனால் அச்சமடைந்தவர் மீண்டும் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து தஞ்சம் கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் கட்டளைக்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர் மீது நான்கு திறந்த பிடியாணைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.