ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

4 months ago


ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரை கூட்டமானது இன்று(07.09.2024) பிற்பகல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது.

இந்த பரப்புரை கூட்டமானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உரையாற்றிய முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,

“தீர்மானம் மிக்க தேர்தல் ஒன்றை நாம் தற்போது சந்தித்துள்ளோம். 

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. 

எனவே, நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கும் எமது வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதே ஒரே வழியாகும்.

கட்சி, இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

2002ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததையடுத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. 

எரிபொருள், எரிவாயு என்பனவற்றை கொள்வனவு செய்ய வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நாட்டின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் நாடு ஸ்தம்பித்தது.

இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். இத்தகைய கஷ்டங்களிலிருந்தும் வரிசை யுகத்திலிருந்தும் மக்களை மீட்டெடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார்.

கடந்த கால துன்பங்களை, துயரங்களை மறந்து தற்போது சில தரப்பினர் செயற்படுகின்றனர். 

தனி ஒருவராக துணிந்து நின்று நாட்டை பொறுப்பேற்று மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

நாட்டில் மீண்டும் வரிசையுகம் ஏற்படக் கூடாது. பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி விடக் கூடாது என்று கருதினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சகலரும் ஆதரிக்க வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் பல்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். 

எமது தலைவர் ரணில் விக்ரசிங்க ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் செயற்பட்டிருக்கின்றார்.

இந்தப் பதவிகளில் பல்லாண்டு கால அனுபவத்தை அவர் கொண்டிருக்கிறார். அத்துடன் சர்வதேச தலைவர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றார். 

முன்னணி நாடுகளுடன் தொடர்பினை பேணுகின்றார். பொருளாதார தீர்மானங்களை உடன் மேற்கொள்ளக் கூடியவராக அவர் திகழ்கின்றார். சவால்களை சந்திக்கக் கூடியவராகவும் வேலைத் திட்டங்களை கொண்டவராகவும் அவர் செயற்படுகின்றார். 

தற்போது ஜனாதிபதித் தேர்தலில் இங்கு போட்டியிடும் 38 வேட்பாளர்களில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர இந்த தகுதிகள் வேறு எவருக்கும் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.