நாங்கள் ஒரு அரசியல் யாப்பை கொண்டு வருவோம். அதனூடாக உரிமைகளைப் பாதுகாப்போம் பிமல் ரட்நாயக்க தெரிவிப்பு
"நாங்கள் புதிய ஒரு அரசியல் யாப்பை விரைவாக கொண்டு வருவோம். அதனூடாக அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதுவரை மாகாண சபை முறைமையை பாதுகாப்போம்.அந்த தேர்தலும் நடத்தப்படும்." என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தப் பகுதியில் எமக்கான ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர்.
இதே வேளை, தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ரில்வின் சில்வா கருத்து தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்படவில்லை.
அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வடக்கு - கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அரசியல், கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக் கொள்கின்றோம்.
இலங்கையில் தேசிய ஒற்றுமை இல்லை என்ற பிரச்னை உண்டு.
ஆனால் கடந்த காலங்களில் நாம் சொன்னோம் என பாரிய பொய்களைச் சொன்னார்கள்.
முஸ்லிம்கள் தாடி வளர்க்க முடியாது, பள்ளி செல்ல முடியாது என்றெல்லாம் சொன்னார்கள்.
நான் நினைக்கிறேன் இந்த கருத்தும் அவ்வாறான ஒன்றாக இருந்திருக்கும்.
இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அது எமது கொள்கைகளிலும் ஒன்று.
அடுத்து அனைவருக்குமான நீதி சமமானதாக இருக்க வேண்டும். புத்தகத்தில் மாத்திரம் அல்ல செயற்பாட்டிலும் அது இருக்க வேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்களின் கலாசார உரிமைகள் ஒழுங்காக பாதுகாக்கப்படவில்லை. அதை ஏற்றுக்கொள்கின்றோம்.
அதனைப் பாதுகாப்பதற்காகவே 13 ஆவது திருத்தம் இந்தியாவால் கொண்டு வரப்பட்டிருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் தமிழ், முஸ்லிம் மக்கள் நினைக்கின்றார்கள் அந்த சீர்திருத்தம் மாத்திரம் இருந்தால் போதும் என்று.
ஆனால் நாங்கள் புதிய ஒரு அரசியல் யாப்பினை கொண்டு வருவோம். அதனூடாக அனைவரது உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
அதுவரை மாகாணசபை முறைமையை பாதுகாப்போம். அந்த தேர்தலும் நடத்தப்படும்.
கடக்கின்ற ஒரு வருடத்துக்குள் மிகச் சிறந்த விவாதங்களுக்கு பின்னர் பலரது ஆலோசனைகளைப் பெற்று சரியான ஒரு அரசியலமைப்பு முறையினை இந்த நாட்டில் உருவாக்குவோம்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட லலித் குகன் மற்றும் திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக தற்போதே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 வாரங்களே ஆகின்றன.
எனினும் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்-என்றார்.
அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.